திங்கள், 3 ஜூலை, 2017

சிறுகதை - வாய்ப்பு

“காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..!” – அவன் பயத்தில் அலறினான்.

ஒரு சிறிய கிராமம். அருகிலேயே ஒரு வயதான காடு..!
காடு என்றவுடன், ‘எர்வாமேட்டின்’ காட்டும் அமேசான் காடுகள் ரேஞ்சுக்குக் கற்பனை செய்யாதீர்கள். இரண்டு நாடுகளில் முகவரி போட்டாலே, எப்படி ஒரு நிறுவனம் “இன்டர்நேஷனல் கம்பெனி” – ஆகிறதோ, அப்படி, சில நூறு மரங்களும், சில புதர்களும் சேர்ந்து இருந்து, இடையில் முறையான சாலை இல்லையென்றால், அதன் பெயர் காடுதான்.

காட்டின் நடுவே ஒரு மிகப்பெரிய, ஆழமான பள்ளம் இருந்தது. காதலைப் போல, விழுந்துவிட்டால், மீளவே முடியாத அளவிற்கு, மிக ஆழமான பள்ளம். காட்டில் சுள்ளி பொறுக்கச் சென்ற சிறுவன் வேலன், ஒரு புதரில் தடுக்கி, அப்பள்ளத்தில் விழுந்துவிட்டான். அவன்தான் அலறினான்.

“பயப்படாதே, தம்பி..!” – குரல் கேட்டு, அதிக பயத்துடன் திரும்பினான். ஒரு உருவம் மங்கலாகத் தெரிந்தது. “தம்பி! நீ இங்க தனியாள் இல்ல. நாங்க இருக்கோம்!” – வாசன் ஐ கேர் விளம்பரம் போல, அந்த உருவம் பேசியது. 

“என்னது... நாங்களா..? நிறையப் பேர் ஏற்கனவே இந்தப் பள்ளத்துக்குள்ள இருக்காங்களா..?” வேலன் யோசிக்கும்போதே, தீப்பந்தம் ஒளிர, இருவர் முன்னே வந்தார்கள். பின்னால் பல பேர் இருந்தார்கள்.

“தம்பி, நாங்கள்லாம் உன்னை மாதிரி, தவறி விழுந்தவங்கதான். ரொம்ப காலமா, இங்கதான் இருக்கோம். அப்பப்ப, ஒவ்வொருத்தரா உள்ள விழவும், இவ்வளவு பேர் சேர்ந்துட்டோம்!”

“எப்படி உயிர் வாழறீங்க..?”

“அது ஒண்ணும் பிரச்சனையில்ல. பள்ளத்துக்குள்ள முளைக்கிற சின்னச் செடி, எறும்பு, மண்புழு-ன்னு ஏதாவது சாப்பிடக் கிடைக்கும். இது தவிர, குரங்கோ, காத்தோ மரங்களை அசைச்சா காய், பழம் ஏதாவது கிடைக்கும். தோண்டினா தண்ணி வரும். சாகற வரைக்கும் வாழணுமில்ல..?!”

“நம்ப ஊர்லயே மொத்தம் இருநூறு பேர்தான் இருப்பாங்க. இங்கயே 20, 25 பேர் இருக்கீங்க.! உங்களை யாருமே தேடலையா..? காப்பாத்த வரலையா..?”

“அதை நான் சொல்றேன்!” என்றபடி முன்னே வந்தாள், டிவி சீரியல் அண்ணி போன்ற ஒரு பெண். “நான் ஊர்ல இருந்தபோது, ஒரு கூட்டம் போட்டாக... அப்ப என்ன நடந்துச்சுன்னா...” என்றபடி, முகத்தை வானத்தை நோக்கிப் பார்த்தாள். மற்றவர்களும் மேலே பார்த்தார்கள்..! எதற்கு? பிளாஷ்பேக்- வருதாம்..!

கூட்டத்தில் ஒருவர் தொடங்கினார்... “அய்யா, இதோட நாலஞ்சு பேரைக் காணோம்! நேத்துலருந்து என் பொஞ்சாதியையும் காணோம்..! காட்டுக்குள்ள இருக்கற பள்ளத்துல விழுந்துட்டாங்க-ன்னு பலரும் பேசிக்கிறாக..! காப்பாத்துங்க அய்யா!”

“பொஞ்சாதியைக் காணோம்னா சந்தோசமா இருவே..!” நாட்டாமை சொல்ல, சிலர் மட்டும் சிரித்தனர். “ஆளைக் காணோம்னா, ஏதோ சாமிக்குத்தம் பண்ணிருக்குதாங்கன்னு அர்த்தம். பள்ளத்துல விழுந்துருக்காங்க-ன்னா, சில பேரு மட்டும் ஏன் விழுவுறாங்க..? அதோ இருக்காரே...  சாமி... விழுந்தாரா..? நம்ம அண்ணாச்சி விழுந்தாரா..? அவ்வளவு ஏன், நான் விழுந்தேனா..? பாவம் பண்ணவங்க... தொலையுறாங்க... விடுவே..!”

“ஆமா, அவங்கள்லாம் ஏன் விழலை..? நாம பாவம் செஞ்சவங்களா..?” – வேலனின் கேள்வி, பிளாஷ்பேக்கை நிறுத்தியது.

“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா..! அவங்கள்லாம் காட்டுக்குள்ளயே வரமாட்டாங்க. அப்புறம் எப்படி பள்ளத்துல விழுவாங்க..? அவங்க தேவைக்கும் சேர்த்து, நாமதானே வேலை செய்றோம்..!?” – ஒரு மீசையண்ணா உறுமினார்.

வேலன் கேட்டான்... “அப்படின்னா, நாம இங்க விழுந்து கிடக்க, அவங்கதான் காரணமா..?”

“அவங்க நம்மளைத் தள்ளிவிடலையே..!” – கேட்ட ஒரு வெண்தாடிக்காரர், தொடர்ந்தார்... “ஆனா, நம்மளைக் கண்டுக்காம இருக்காங்க பாரு... அதுதான் தப்பு..! மனுசங்க, எல்லாரையும் ஒண்ணாப் பாக்குறதில்லை. நான் உன் வயசுல இருந்தபோது, அவங்க அவங்களுக்குத் தெரிஞ்ச, முடிஞ்ச வேலையைச் செய்யறோம்னுதான் நினைச்சோம். அப்புறமா, இந்த வேலை பெருசு, இந்த வேலை சிறுசு-ன்னு பிரிக்க ஆரம்பிச்சாங்க. நாமளும் ஏத்துக்கிட்டுப், பேசாம இருந்துட்டோம்..!”

வேலன் கொதித்தான்... “அப்ப பேசாம இருந்ததுதான் தப்பு..! வாங்க, எல்லாருமா கத்துவோம்..! காப்பாத்துங்க..! காப்பாத்துங்க..!”

“தம்பி, நேத்து விழுந்து செத்த நாய்க் கறி இருக்கு. இன்னிக்கு, நல்லா சாப்பிட்டுத் தூங்கு. நாளைக்குப் பார்க்கலாம்..!”

 மறுநாள், வேலன் எல்லோரையும் அழைத்துக் கத்தச் சொன்னான். சிலர் சேர்ந்து கத்தினார்கள். நீண்ட கால மௌனத்தால், சிலருக்குக் குரல் வரவே இல்லை. பல முறை கத்திய பின்னர், கத்தியவர்களின் தொண்டை வற்றியதே தவிர, உதவிக்கு யாரும் வரவில்லை. எல்லோரும் சோர்ந்து போனார்கள். வேலன் மட்டும் உறுதியாயிருந்தான்.

கொஞ்சம் உணவு – கொஞ்சம் ஓய்வு – கொஞ்சம் அலறல் என்று நாட்கள் பல கழிந்தன. மனித மொழி புரியவில்லையோ என்று, வேறு வேறு ஒலிகளை எழுப்புமாறு ஆணையிட்டான் வேலன். பிறகு, கட்டைகள், கிடைத்த பொருட்களைக் கொண்டு நில அதிர்வை உருவாக்க முயன்றனர். மரங்களைத் தவிர, மேலே இருந்த எந்த மனிதரிடத்தும் அசைவில்லை.

முதல் குரல் கொடுத்ததாலும், முன்னெடுத்ததாலும் கிட்டத்தட்ட, தலைவனாகி இருந்தான் வேலன். ஒருநாள் காலைக்கடனுக்காய் அமர்ந்திருந்தபோது, திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. அனைவரையும் கூட்டினான். “இனி நம் எல்லாப் போராட்டங்களையும், இரவு நேரத்தில் செய்வோம். அப்போதுதான், நம் ஒலிகள் அவர்களைத் தொல்லை செய்யும்..!” என்றான். அவ்வாறே செய்தார்கள். பலனும் கிடைத்தது.

பகலில், கிராமம் கூடியது. இரவுகளில் தூங்க முடியாமல், காட்டில் இருந்து பல்வேறு ஒலிகள் வருவது குறித்துக் கவலை கொண்டார்கள். எங்கிருந்து ஒலிகள் வருகின்றன எனக் கண்டுபிடிக்க, ஆட்களை நியமித்தார்கள். சில நாட்களுக்குப் பின், பள்ளத்திலுள்ள மனிதர்கள் பற்றி அறிந்தார்கள்.
நாட்டாமை தலைமையில், ஊர்ப்பெரியவர்கள், பள்ளத்தின் அருகே சென்றார்கள். சிறிய உருவங்களாய்த் தெரிந்த பள்ளவாசிகளிடம், பெரிய உருளைகளைக் கொண்டு பேசினார்கள். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பள்ளத்திற்குள் கயிறுகள் வீசப்பட்டன. ஆனால், அவ்வளவு உயரத்திற்கு, கயிறைப் பிடித்து ஏறப் பலருக்கும் தெரியவில்லை. ஏறத் தெரிந்தோருக்கும், உடல்வலு வற்றிப்போயிருந்ததால், ஏற முடியவில்லை.

மாற்று வழி கண்டறியும் வரை, இடைக்கால நிவாரணமாக, உணவுப் பொட்டலங்களும், தண்ணீர்ப் பானைகளும் பள்ளத்திற்குள் இறக்கப்பட்டன. தினமும் உணவும், தண்ணீரும் கிடைத்ததும், பள்ளவாசிகள் மகிழ்ந்தனர். கயிறைப் பிடித்து மேலே ஏறும் முயற்சியைக் கைவிட்டனர். பள்ளவாசிகள் அமைதியானதால், கிராமவாசிகளும் மகிழ்ச்சியுடன், அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டனர். வேலை செய்ய விரும்பாத சிலர், சும்மா இருந்தாலே உணவு கிடைக்கிறதே என்றெண்ணி, பள்ளத்திற்குள் வேண்டுமென்றே விழத் தொடங்கினர்.

இதையெல்லாம் கவனித்திருந்த வேலனின் கவலை அதிகரித்தது. ஒருநாள் வெடித்துச் சீறினான். “இப்படியே எத்தனை நாள் இருக்கப் போகிறீர்கள்..? மேலே ஏறும் உத்தேசம் இல்லையா..?”

“நம்மால் வேறு என்ன செய்ய முடியும்..?” – பள்ளவாசிகள்.

“என்னால் முடியும். நான் ஒருவன் மேலே ஏறி விட்டால், கிராமவாசிகளிடம் பேசியோ, மிரட்டியோ உங்கள் அனைவரையும் மீட்பேன். ஆனால் அதற்கு நீங்கள் உதவ வேண்டும்..!”

சிலர் கோபுர வடிவத்தில் முதுகில் சுமக்க, சிலர் தூக்கிவிட, சிலர் மண்ணைச் செதுக்க, சிலர் உபகரணங்கள் செய்து தர என்று எல்லோரும் உதவி செய்ய, கொஞ்சம் சுயமுயற்சி சேர்த்து, கயிறு பிடித்து, மிகுந்த சிரமப்பட்டு, மேலே ஏறினான் வேலன். பள்ளவாசிகள் ஆனந்தக் கூத்தாடினர்.

கிராமத்திற்குள் வந்த வேலன், நாட்டாமையைச் சந்தித்தான். பள்ள வாழ்க்கையை விவரித்தான். பிறகு, “நீங்கள் எனக்கு, நிறைய சம்பளத்துடன், கிராம அதிகாரி என்னும் பதவியைத் தர வேண்டும். இல்லையென்றால், பள்ளவாசிகளைத் திரட்டிப் போராடுவேன். உங்கள் தூக்கத்தைக் கெடுப்பேன்..!” என்று மிரட்டினான்.

பள்ளத்தில் தொங்கிக் கொண்டிருந்தன... கயிறுகளும், கனவுகளும்..!

1 கருத்து:

  1. கதையின் இறுதி வாக்கியம் அருமை ....ஏறிய கயிறையும் மற்றவர்களுடைய கனவுகளையும் தொங்கவிட்டு விட்டு அதாவது தொங்கலில் விட்டு விட்டு மேலே ஏறியவுடன் மக்களை வைத்து பேரம் பேசுபவர்களை ஒரு நிமிடம் உணர்ந்து பார்க்க தூண்டியது.....

    பதிலளிநீக்கு