திங்கள், 11 ஏப்ரல், 2016

கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு..?


     தேர்தல் நெருங்கி வருகிறது. எல்லா மனிதர்களும், எல்லா ஊடகங்களும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் இந்திய ஜனநாயகத்தில், கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யோசிப்போமா..!

     தமிழர்களின் ரத்தத்திலேயே கட்சி ஊறியுள்ளது என நினைக்கிறேன். எப்படி வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும், சாதி உள்ளுக்குள் கலந்தே இருக்கிறதோ அப்படி. குடும்பத்தில் குழந்தையிடம் கூட, ஏதேனும் விவாதம் வந்தால், “நீ எப்பவுமே அம்மா கட்சிதான்” என்கிறார் அப்பா. நண்பர்களிடையே, பொது இடங்களில், மேடைகளில், வலைத்தளங்களில், வணிகத்தில் என்று எல்லா இடங்களிலும், கட்சியின் காட்சி தெரிகிறது.

     இங்கே பெரும்பாலானோர் கட்சி அரசியலில் கலந்தே இருக்கின்றனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு ஆதரவோ, எதிர்ப்போ இருக்கிறது. எதிர் எதிர் அணியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் கூட, சிலரோடு மட்டும் நட்புப் பாராட்டுவதை, தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கிறோம். நேரடியாகக் கட்சியின் உறுப்பினராக இல்லாதவர்களும், ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான மன நிலையையே கொண்டுள்ளனர். சமீபமாக, எந்தக் கட்சியையும் ஆதரிக்காத சிலரிடம் கூட, ஒரு கட்சியைத் தீவிரமாக எதிர்க்கும் மனநிலையை, சமூக வலைத்தளங்களில் நான் காண்கிறேன். நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றி விமர்சிக்கும் போது, மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதை நான் கவனிக்கிறேன்.

     இதை எல்லாம் நான் அறிந்திருந்தாலும், ஆராய்ந்து ஓய்ந்திருந்தாலும், இன்னும் எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி... – தேர்தலில் ஒரு வாக்காளரைப் பொறுத்தவரை, கட்சிகளின் முக்கியத்துவம் என்ன..?

     உண்மையாகச் சொல்லப் போனால், ஒன்றுமே இல்லை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள, முதலில் நம் ஜனநாயக நடைமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

     மக்களாட்சி முறையில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று, அமெரிக்காவில் உள்ளது போன்ற நேரடி மக்களாட்சி. மற்றொன்று, நம் நாட்டில் உள்ளது போன்ற பிரதிநிதித்துவ மக்களாட்சி.

     நேரடி மக்களாட்சியில், மக்கள் எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று வாக்களிக்கின்றனர். அந்தக் கட்சி, மக்களின் பிரதிநிதிகளை முடிவு செய்யும். உதாரணமாக, அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. இதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதிக இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அந்தக் கட்சியின் சார்பில் யார் நிறுத்தப்படுகிராரோ, அவரே ஜனாதிபதி ஆவார்.

     ஆனால், இந்தியாவில் எந்த வாக்காளரும், எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியாது. இங்கே, அவரவர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கே வாக்களிக்கிறோம். கட்சிக்கு அல்ல. இந்த வேட்பாளர்களில், வெற்றி பெறுபவர்கள் இணைந்து, தங்களுக்குள் ஒருவரை முதல்வராகவோ, பிரதமராகவோ தேர்ந்து எடுப்பர். அதனால், முதல்வர் வேட்பாளர் என்பது சட்டப்படி எந்த முக்கியத்துவமும் இல்லாதது.

     வேட்பாளர்கள் சுயேச்சையாகவோ, கட்சி சார்ந்தோ போட்டியிடலாம். சின்னங்கள் கூட, வேட்பாளர்களை அடையாளப் படுத்தத்தானே தவிர, வேறெந்த முக்கியத்துவமும் இல்லை.

     பிறகு ஏன் கட்சி அரசியலைப் பற்றியே எப்போதும் பேசுகிறோம்..? ஆட்சி அமைக்க வசதியாக, கட்சி என்ற ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. கொள்கைகள்(?), கட்டுப்பாடு(?), நோக்கம்(?), ஒரு தலைமை(?) – இதெல்லாம் கட்சி என்ற அமைப்பில் இருக்க வேண்டும். அப்போது, எந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுகின்றார்களோ, அந்தக் கட்சியின் வெற்றியாளர்கள் மட்டும் கூடி ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். ஆளுநரும் அவரையே ஆட்சி அமைக்க அழைக்க வசதியாக இருக்கும். இதெல்லாம் கூட, சட்ட ரீதியான ஒரு ஏற்பாடுதான்.

     ஆனால், வாக்காளர் இது குறித்து எல்லாம் சிந்திக்கத் தேவையே இல்லை என்றே நான் நினைக்கிறேன். என் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர், சிறந்தவர், பொதுநலனுக்காக செயல்படுபவர் யார் என்று அறிந்து, ஆய்ந்து, தேர்ந்து ஓட்டுப் போடுவதுதான் வாக்களரின் வேலை. மாநில அளவில் எப்படி ஆட்சி அமைப்பது என்று சிந்திப்பது எல்லாம் அரசியல்வாதிகளின் வேலை. அவரவர் வேலையை அவரவர் பார்க்கலாமே..!

இன்று ஏற்பட்டுள்ள எல்லா சீரழிவுகளுக்கும், இந்தக் கட்சி சார்ந்த அரசியலே காரணம் என்று நான் எண்ணுகிறேன். எனக்குப் பிடித்த கட்சி, காரணமே தெரியாமல் கூட்டம் கூட்டமாகக், குடும்பத்தோடு ஆதரவளிக்கும் கட்சி என்றெல்லாம் பார்க்கிறோம். இதை விடக் கொடுமை, “ஜெயிக்கிற கட்சி”-க்கு ஓட்டளிப்பது. நான் ஓட்டுப் போடுபவர் ஜெயிக்க வேண்டுமா..? யார் ஜெயிப்பவர் என்ற ஆருடத்தின் அடிப்படையில் நான் ஓட்டுப் போடுவதா..? இது என்ன குதிரைப் பந்தயமா – ஜெயிக்கிற குதிரையின் மீது பணம் கட்ட..?

பல நேரங்களில், மனிதர்களின் கேடுகளுக்குக் காரணம், அவர்கள் அதீத அறிவாளிகள் ஆக முனைவதுதான். ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்சி, முதல்வர் வேட்பாளர் போன்ற மாயைகளை எல்லாம் உடைத்து எறிவோம். சாதாரண குடிமகனாக, சாமானிய வாக்களனாக, நம் கடமை, நம் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதே ஆகும். ஏனென்றால், மீண்டும் நினைவூட்டுகிறேன்... நம்மால், நம் தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவருக்கு மட்டுமே ஓட்டளிக்க முடியும். நம் தொகுதியின் பிரதிநிதியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

“நல்ல வேட்பாளருக்கே ஓட்டுப் போடுவோம்..!
யாருமே இல்லை என்றால்,

நோட்டா-விற்குப் போடுவோம்..!

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இளைஞர்கள் ஆட்சி

உலகின் இளமையான நாடு இந்தியா என்று போற்றிக் கொண்டே இருக்கிறோம். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது மட்டுமே பெருமை ஆகாது. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், பெருமையா அல்லது பொறுப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
     இளைஞர்கள் பெரும்பாலும் சாதிக்கும் துறைகள் இரண்டுதான். ஒன்று விளையாட்டு. மற்றொன்று சினிமா. இந்தத் துறைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. என்றாலும், நம் நாட்டை முன்னேற்ற இந்தத் துறைகள் உதவாது. அதற்கு முக்கியமான துறை... அரசியல்..!

     அரசியலில் இளைஞர்களின் பங்கு என்ன..? இதுவரை இருந்த நம் நாட்டு நாடாளுமன்றங்களிலேயே, இப்போது இருக்கும் அவைதான் மிக வயதான அவை. ஆம்..! தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது – 54.  இருக்கின்ற 543 மக்களவை உறுப்பினர்களில், 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை வெறும் 71 மட்டுமே.
     இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நடந்த முதல் இரண்டு தேர்தல்களில்தான், இளைஞர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அது படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அதே நேரத்தில், 70 வயதுக்கும் அதிகமான ‘மூத்த குடிமக்களின்’ எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. என்ன செய்கிறோம் நாம்..?

     இந்திய நாடாளுமன்றத்தின் அதே நிலைதான், நம் தமிழகத்தின் சட்ட மன்றத்திலும். சில நாட்களில் ஆயுட்காலம் நிறைவுற இருக்கும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இளைஞர்கள். அதாவது, மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுள், 40 வயதிற்கும் குறைவானவர்கள், வெறும் 23 பேர் மட்டுமே. ஆனால், 60 வயதிற்கும் அதிகமானவர்களின் எண்ணிக்கையோ 31 ஆக உள்ளது.

     அரசியல் அனுபவம், பின்புலம், பணம் போன்ற காரணங்களைத் தயவு செய்து முன் வைக்காதீர்கள். ஏனென்றால், இவையெல்லாம் தேர்தலில் வெற்றி பெறுவதற்குக் காரணமாகச் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வாய்ப்பு அளித்தால்தானே வெற்றி பெறுவார்கள்..?
    2014 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர்களில் 14 சதவீதமும், பிஜேபி சார்பாகப் போட்டியிட்டவர்களில் 12 சதவீதமும் மட்டுமே 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
     தமிழகத்தின் நிலை, இதை விடக் கொஞ்சம் பரவாயில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 738 வேட்பாளர்களில் 188 பேர் இளைஞர்கள். இதில், திமுக சார்பில் போட்டியிட்டவர்களில் சுமார் 30 சதவீதமும், அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களில் சுமார் 23 சதவீதமும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

     

     ஆனால், மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் இளைஞர்கள் எனும்போது, வேட்பாளர்களிலும் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது இளைஞர்களாக இருக்க வேண்டாமா..? இது பற்றி நம் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் சிந்திப்பார்களா..?
     எல்லாக் கட்சிகளும், இளைஞர்களைக் குறிவைத்தே பிரச்சாரம் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் வழியான சண்டை அதனால்தான் சூடு பிடித்திருக்கிறது. வாக்களிக்க மட்டும் எல்லாக் கட்சிகளுக்கும் இளைஞர்கள் வேண்டும். ஆனால் போட்டியிட வாய்ப்பு என்று வரும்போது இளைஞர்களுக்கு இல்லையா..? போஸ்டர் ஒட்டவும், போராடவும், கூட்டம் திரட்டவும் இளைஞர்கள் வேண்டும். பதவி கொடுக்கும்போது அவர்களைப் பின் தள்ளுவது நியாயமா..?
    

     இந்தியா முன்னேறுவதற்குக் கரை படியாத அரசியலும், முறையாகச் செயலாற்றும் அதிகாரமும் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி நடப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு மிச்சம் இருக்கிறது என்றால், அது இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.
     முதலில், அரசியல் கட்சிகள் மனம் வைக்க வேண்டும். அரசியல் சூழல் இளைஞர்கள் இணைவதற்கு உகந்ததாய் மாற வேண்டும். நல்ல அரசியல் குறித்து, இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
     மறியல்களும், வன்முறைகளும், சாதி வெறுப்புகளும், சகுனித்தனங்களும், பண பலங்களும், அணி சேர்ப்புகளுமே ‘அரசியல்’ என்ற எண்ணம் இளைஞர்களிடம் ஆழப் பதிந்துள்ளது. இதையே, என்டிடிவி-யின் ஆய்வும் எடுத்துக் காட்டுகிறது.




     இதை மாற்ற வேண்டும்..! நல்லெண்ணத்தை அவர்கள் மனதில் ஊற்ற வேண்டும்..! அதற்காக, நம் ஒவ்வொருவரும் கடமை ஆற்ற வேண்டும்..!