புதன், 30 ஜனவரி, 2013

மொழி இல்லை என்றாலும் வழி இருக்கும்..!


“நீங்கள் சீக்கிரம் ஊமை ஆகிவிடுவீர்கள்..!” பொதுவாக, எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும், கலங்காத வழக்கமுடைய என்னையும், அந்த வார்த்தைகள் கொஞ்சம் அதிர்ச்சி அடையத்தான் செய்தன.

  பயிற்சிகளின் போதும், மேடைப்பேச்சுகளின் போதும், அவ்வப்போது, தொண்டை வலிக்கும். கரகரக்கும். குரல் நடுங்கும். மாற்றமடையும். எப்போதும், தற்காலிகத் தீர்வுகளின் துணைகொண்டு, சமாளித்து வந்த நான், நேற்று முன்தினம் (2013, ஜனவரி 28), சேலத்தில், ஒரு பயிற்சி நிகழ்வுக்காகச் சென்றிருந்த போது, நிரந்தரத் தீர்வு காண எண்ணி, ஒரு மருத்துவரை சந்தித்த போது, அவர் சொன்ன மறக்க முடியாத வார்த்தைகள்தான், முன்பு சொன்ன “நீங்கள் சீக்கிரம் ஊமை ஆகிவிடுவீர்கள்..”

  அதிகமான ஒலி அளவு, நீண்ட நேரம் பேசுதல், தொடரும் பயணங்கள், உடல் நலம் பேணாமை போன்ற பல காரணங்களால் என்னுடைய குரல் வளை முழுவதும் ரணப்பட்டிருக்கிறது என்றும், என்னுடைய உண்மையான குரல் மாறி வருகிறது என்றும் கூறிய அந்த மருத்துவர், உடனடியாக நான் பேசுவதை நிறுத்தாவிடில், இன்னும் சில ஆண்டுகளில், பேசும் திறனை, என் குரலை முழுவதுமாக நான் இழக்க நேரிடும் என்றும் எனக்குத் தெளிவுபடுத்தினார்.

  பிறந்து, மூன்று வயது வரை பேசாமல் இருந்தவன் நான். கடவுளின் கருணையால், என் பெற்றோரின் அன்பால் பிறகு பேசத் தொடங்கினேன். 9 வயதில் மேடையேறிப் பேசத் தொடங்கிய நான், அதற்குப் பின் பேசாமல் இருந்த நிமிடங்கள் மிகவும் சொற்பம். மூச்சை விடவும், அதிகமாகப் பேச்சை சுவாசித்தவன் நான். என்னைப் பேசக் கூடாது என்று சொன்னால் எப்படி..?

  பதினொன்றாம் வகுப்புப் படிக்கும்போது, தாடையில் அடிபட்டு, ரத்தத்தோடு மருத்துவரிடம் சென்றபோது, அவர் தையல் போட்டார். வாயின் வழியாக நீர் அருந்துவதே கடினமாக இருந்த அந்த வலிமிகுந்த நிலையிலும், பேச்சை நிறுத்தாதவன் நான். இப்பொழுது, நான் பேசப்போகும் நாட்களை எப்படி எண்ணிக்கொண்டிருப்பேன்..? சாப்பிடாமல் கூட இருப்பேன். பேசாமல் இருப்பேனா..?

  எனக்காகப் பேசியது மிகவும் குறைவு. என்னுடைய பேச்சைக் கேட்பவர்கள், அவர்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கவும், எல்லாப் பிரச்சனைகளையும் துணிவுடன் எதிர்கொள்ளவும், நம்பிக்கை மலரவும், அவர்கள் வாழ்வில் ஒரு அங்குலமாவது உயரவும் மட்டுமே, இத்தனை ஆண்டுகளாக நான் பேசிக்கொண்டே இருந்தேன். இருக்கிறேன். இனி யாருக்கும் என் பேச்சு தேவையில்லையா..?

  எட்டு டிகிரி படித்த பின்னரும், எந்த வேலைக்கும் போகாமல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை பதிவு கூட செய்யாமல், மற்றவர் நலம்பெற, என்னால் இந்த சமுதாயத்திற்குச் செய்ய முடிந்த தொண்டாகப், பேச்சை ஒரு தவமாகச் செய்து கொண்டிருக்கும் என்னால், பேசாமல் இருக்க முடியுமா..?

  எங்கு என் குரல் கேட்டாலும், உன் குரலை வைத்துதான் அடையாளம் கண்டேன் என்று நண்பர்கள் சொல்லும் அளவிற்கு, என் அடையாளமாகவே இருக்கும், என் குரல் இனி என்னிடம் இருக்காதா..? புதிதாக என் பேச்சைக் கேட்பவர்கள் கூட, என் கருத்துகளைத் தாண்டி, முதலில் பாராட்டுப் பெறும் என்னுடைய குரல், இன்னும் கொஞ்ச காலத்தில் மறைந்து விடுமா..? பலருக்கும் ஆறுதல் தரவும், நம்பிக்கை கூட்டவும், வழிகள் காட்டவும், தவறுகளை எதிர்த்துப் போராடவும் செய்த என் குரல், இனி வெறும் வரலாறுதானா..? அதற்கு வருங்காலம் இல்லையா..?

  யோசிக்க, யோசிக்க... எழுத, எழுத என் உள்ளம் உறைந்துபோகிறது. எனக்காக, என் வாழ்நாளில் நான் அழுததே இல்லை. அழுவதே அவநம்பிக்கையின் அறிகுறி என்று எண்ணுபவன் நான். அதனால், நல்லவேளை. கண்ணீர் வரவில்லை. அதனால், யாரிடமும் அது காட்டிக் கொடுக்கவும் இல்லை. ஏன் இப்போது மட்டும் இத்தனை நேரம் அது பற்றி சிந்திக்கிறேன்? அப்படி என்ன பெரிய பிரச்சனை..?

  எனக்கு, கேன்சர் இருக்குமோ என்ற சந்தேகித்த பொழுது கூட, நான் கலங்கவில்லையே..? நான் நடத்தி வந்த பயிற்சி நிறுவனத்தின் மீது தவறான புகார் எழுந்தபோது கூட, நான் இவ்வளவு வருந்தவில்லையே..? பல்வேறு சூழ்நிலைகளில் பணப்பிரச்சனை ஏற்பட்டபோது கூட, நான் புலம்பவில்லையே..? என் பெற்றோரின் லட்சியக் கனவாக இருந்த, சொந்த வீடு என்பதை, நான் நிஜமாக்கிய நான்கே மாதங்களில், அது இடிக்கப்படக்கூடும் என்ற தகவல் வந்த போது கூட, நான் மயங்கவில்லையே..? என் அண்ணனின் இல்லற வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனையில், என் குடும்பத்தையே சிறையில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டியபோது கூட, நான் பயப்படவில்லையே..?

  காரணம் உள்ளது. என் கால்கள் பழுதானால், கைகள் உடைந்தால், காதுகள் கேட்கவில்லையென்றால், கண்களை இழந்தால் கூட, நான் இவ்வளவு சிந்தித்திருக்க மாட்டேன் என்றே எண்ணுகிறேன். ஏனென்றால், வாயிருக்கிறது. நான் சாதித்துவிடுவேன் என்றே, இத்தனை காலமும் நம்பி வந்தேன். இப்போது, அதிலேயும் சிக்கல் என்றால்..? எனக்கு ஓவியம் வரையவோ, சிற்பம் செதுக்கவோ தெரியாது. வேறு எந்த சிறப்புத் திறமையும் கிடையாது. பேசாமல் இருந்தால், என்னால் என்ன சாதிக்க முடியும்..?

  இரண்டு நாள் மனப்போராட்டத்தின் முடிவில் ஒன்று மட்டும் தெரிகிறது. நான் எதையும் இழக்கலாம். என் நம்பிக்கையை அல்ல என்பது மட்டும் புரிகிறது.

  வாயில்லை என்றாலும், வாழ்க்கை என்னிடமே இருப்பதாக உணர்கிறேன். குரல் குலைந்து போனாலும், கொடுப்பதற்கு எனக்கு ஏதேனும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். மொழியில்லை என்றாலும், வழி இருக்கவே செய்யும் என்றே சிந்திக்கிறேன். இப்போதும், உறுதியான திட்டம் ஏதும் இல்லை. ஆயினும், திட்டம் இட வேண்டும் என்ற திடம் மட்டும் உள்ளது. நல்ல மனிதர்களின் துணையோடு, விரைவில், மிகப்பெரிய அளவில், ஏதேனும் ஒரு துறையில் சாதிப்பேன். அதற்காக, எந்தச் சோதனையையும் சந்திப்பேன். சாதிக்கும் வரை மட்டுமல்ல, சாகும் வரையிலும், தொடர்ந்து சமுதாய நலனையே சிந்திப்பேன்..!

செவ்வாய், 15 ஜனவரி, 2013

வாழ்வை நேசி... வளம் பெற யோசி..!



 இந்தப் (2013) புத்தாண்டை முன்னிட்டு, 

தேனியில் நடைபெற்ற ஒரு பயிற்சி நிகழ்வில், நான் கேட்டேன்... எதற்காக புத்தாண்டு கொண்டாடுகிறோம் என்று..?

பலரின் கருத்துகளைக் கேட்ட பின், நான் சொன்னேன்...

வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம்தான்... ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டியதுதான்... அவ்வாறு கொண்டாட முடியாதவர்கள், கொண்டாட மறந்தவர்கள் மற்றும் கொண்டாட்டங்களைத் துறந்தவர்கள் ஆகியோருக்கு, நினைவூட்டுவதற்காகவே, சில குறிப்பட்ட நாட்களையாவது கொண்டாட வைத்துள்ளது நம் சமூகம்.
அப்படி நம் வாழ்வைக் கொண்டாட, அறிவும், பொருளும் பெருக, உயர்வான சாதனைகள் புரிய, மேலும் வளமும், நலமும் பெறத் தேவையான, மனித வள மேம்பாட்டுப் பயிற்சிகளை, சிறந்த முறையில், கடந்த எட்டு ஆண்டுகளாக வழங்கி வரும் நிறுவனம் தான், எங்களின் "யோசி" - ஆகும்.

தமிழகம் முழுவதும், ஆயிரக் கணக்கான பயிற்சி நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ள, எங்கள் "யோசி" நிறுவனத்தைப் பற்றி மேலும் அறிய, இந்த இணையதளத்தைக் காணுங்கள்...