வியாழன், 26 நவம்பர், 2015

ஒரு பக்கக் கதை: தலைப்பு - கேவலம்


அந்தப் பயணிகள் ரயில் ஊர்ந்து கொண்டிருந்தது. உட்கார இடம் இல்லாததால் எரிச்சலோடும், பரபரப்போடும் நின்று கொண்டே பயணித்துக் கொண்டிருந்தார் அவர்.
கைப்பேசி ஒலித்தது. அழைப்பை ஏற்றுப் பேசினார். "எத்தனை தடவை சொல்றது..? சொன்ன அமௌன்ட்க்கு ஒரு ரூபாய் கூடக் குறையக் கூடாது. நான் என்ன வியாபாரமா பண்றேன்... நீங்க பேரம் பேசுறதுக்கு..? நான் ஒரு கவர்மென்ட் ஆபீசர்ங்கறதை ஞாபகத்துல வச்சுக்கங்க. இதுல பல பேருக்குப் பங்கு கொடுக்கணும். உங்க காரியம் முடியணும்னா நீங்க கொடுத்துத்தான் ஆகணும்..!"
கோபத்துடன் அழைப்பைத் துண்டித்தார். அந்த நேரம் ஒரு கைத்தட்டும் ஒலி முன்னே வந்தது. ஒரு திருநங்கை பின்னே வந்தார்.
"அய்யா.. அரவாணிக்கு தர்மம்..!" கை நீட்டினார். "கை காலு நல்லாத்தானே இருக்கு. அவனவன் நிக்க முடியாம வேதனையோட ஆபீஸ் போகறான். இதுல உங்க தொல்லை வேற..!"
எரிந்து விழுந்த அந்தப் 'பெரியவரை' இரக்கத்துடன் பார்த்தார் திருநங்கை. சிறிது தூரம் நடந்து சென்று, ஒரு இருக்கையில் உட்கார்ந்து இருந்த இளைஞர்களைக் கொஞ்சம் நகரச் சொல்லிவிட்டு, "சார், இந்த இடத்துல உட்காருங்க" என்று அழைத்தார்.
இருக்கை கிடைத்த மகிழ்ச்சியில், வேகமாய்ப் பத்து ரூபாய் ஒன்றை எடுத்து, திருநங்கையிடம் நீட்டினார்.
"வேணாங்க..! நான் கேட்டதுமே நீங்க கொடுத்து இருந்தா அது தர்மம். இப்பக் கொடுத்தா, அது லஞ்சம். ஏற்கனவே, வேற வழி தெரியாமத்தான், பிச்சை எடுக்கிறேன். அதுக்கும் மேல, இந்த லஞ்சம் வாங்குற கேவலத்தையும் செய்ய என்னைப் பழக்கிடாதீங்க..!"
மானஸ்தன் தலை குனிந்தார்.

புதன், 11 நவம்பர், 2015

எண்ணங்களை மாற்றுங்கள்..! எதிரிகளை அல்ல..!


நாடே எதிர்பார்த்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பிஜேபி தலைமையிலான கூட்டணி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தி-இந்து உள்ளிட்ட பெரும்பான்மையான ஊடகங்கள் நிதிஷைப் புகழ்ந்தும், மோடியை இகழ்ந்தும் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன. விவரங்கள் எல்லாம் சரி..! ஆனால், விளக்கங்கள் சரியா..?
            ஊடகவியலாளர்களும், அறிவாளிகளும் (?) பெரும்பாலும் ஒருவிதமான ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையையே வெளிப்படுத்துகின்றனர். இரண்டுக்கும் இடையேயான நடுநிலைமை காற்றில் பறக்க விடப்படுகிறது. இங்கே கட்சி, மதம், இனம், மொழி, தலைவர்கள், ஆளுமைகள் போன்ற மனிதர்கள் அல்லது அமைப்புகளைக் குறித்தே செய்திகள் முன்வைக்கப்படுகின்றன. அவர்கள் செய்திகளில் இடம்பிடிக்கக் காரணமான  பிரச்சினைகள், சாதனைகள், கருத்துகள் போன்றவை கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன. சில நேரம் காணாமல் அடிக்கப்படுகின்றன.

விருப்பமும், உண்மையும்

     எல்லா உண்மைகளுக்குள்ளும், அதை வெளியிடுபவர்களின் விருப்பமும் கலந்து விடுவதுதான் இன்றைய சிக்கல். இதனால், உண்மைகளின் சக்தி குறைந்துவிடுவதாகவே உணர்கிறேன். உண்மைகள் ஊருக்குத் தெரிய, உள்ளங்கள் உணர, அதை வெளியிடுபவர்கள் தனிப்பட்ட அல்லது பொது விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு அவற்றை வெளியிட வேண்டும்.
     இந்தச் சிந்தனை வரிகள் உங்களுக்கு குழப்பமும், அலுப்பும் தருவதாய் இருந்தால், எளிமையாகவே சொல்கிறேன். எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும் என்பது என் விருப்பம். ஆனால், தமிழ் சினிமாவிலேயே ரஜினிதான் சிறந்த நடிகர் என்று நான் சொன்னால், என் விருப்பம், உண்மையைக் கொன்று விடுகிறது. எனக்கு சச்சின் டெண்டுல்கரைப் பிடிக்காது என்பதும் என் விருப்பம். ஆனால், சச்சின் அதிர்ஷ்டத்தினால்தான் சாதனைகள் படைத்தார் என்று நான் சொன்னால்,  அங்கேயும் என் வெறுப்பு உண்மையைக் கொன்று விடுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் விருப்பங்களும், வெறுப்புகளும் இருக்கும். இருக்க வேண்டும். அது அவரவர் உரிமை. அதை விமர்சிப்பதே தவறு. ஆனால், தன் கருத்துகளை மற்றவர்களின் மூளைகளில் திணிக்கும் போது, விருப்பமில்லாவிட்டாலும் உண்மையையே பதிய வைக்க வேண்டும்.

பீகாரில் வெற்றியும், தோல்வியும்

     பீகாரில் ஆட்சி முறை குறித்த விமர்சனங்கள் இல்லாது, நபர்களின் மீதான தரக் குறைவான விமர்சனங்களை பாஜகவினர் வைத்தனர். தற்போது, பாஜக தோற்றபின், மற்ற கட்சியினரும் அதே தவறைத்தான் செய்கிறார்கள். அரசியல்வாதிகள் தங்கள் விருப்பங்களோடும், எண்ணங்களோடும் எல்லாவற்றையும் இணைத்துப் பேசலாம். ஊடகங்கள் அதைச் செய்யலாமா..? கட்சிகளின் வெற்றி தோல்விக்கான காரணங்களை விடுத்து, பணப் பட்டுவாடா, சாதியப் பற்று, நோட்டா-விற்கு அதிக ஓட்டுகள் விழுந்தது, 58 சத வாக்குகளே அதிகம் என்றானதன் பின்னணி, மக்களின் கல்வி மற்றும் அரசியல் அறிவு போன்ற தேர்தல் தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஊடகங்கள் கவனம் குவிக்க வேண்டுமல்லவா..?
மோடி ஆதரவு அலை அடிப்பதாக பாஜகவினர் இல்லாத ஒன்றை உருவாக்கினர். அதே போல், மோடி எதிர்ப்பு அலை என்று இல்லாத ஒன்றை எதிர்க்கட்சியினர் உருவாக்குகிறார்கள். ஒரு தரப்பினர் பிம்பம் உருவாக்குவதும், மற்றொரு தரப்பினர் அந்த பிம்பத்தை உடைப்பதும் அரசியல்வாதிகளின் பணியாக உள்ளது. ஆனால் ஊடகங்களின் பணி அதுவல்ல. அவை எல்லாமே வெறும் பிம்பம் என்று உணரவைப்பதே. இந்த பிம்பங்களைத் தாண்டி மக்களைச் சிந்திக்க வைப்பதே.
     ஊடகங்களின் நிலைப்பாடுகளால், உண்மையிலேயே கவனம் பெற வேண்டியவை வலுவிழக்கின்றன. இப்போது, இந்துத்துவாவிற்காக பாஜக தோற்கடிக்கப்பெற்றது என்று மகிழ்வதாய் இருந்தால், ஊழல் கரை படிந்த லாலுவின் அமோக வெற்றி வருத்தம் தர வேண்டாமா..? ஊழல் ஒழிப்பை விட, மதச் சார்பின்மையே முக்கியம் என்பீர்களா..? இரண்டுமே முக்கியமானவை அல்லவா..? நம் உடலில் கையா, காலா எது முக்கியம் என்றெல்லாம் விவாதிப்பீர்களா..?
     கட்சிகளின் வெற்றி தோல்வி குறித்து அவரவர்கள் கவலைப்படட்டும். ஊடகங்கள், பிரச்சினைகள் குறித்தும், தீர்வுகள் குறித்தும், எதிர்கால நலம் குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும்..!

விவாதங்களின் வளமும், நலமும்

     ஒரு காலத்தில், சிலருடன் மட்டுமே பழக வேண்டி இருந்தது. மிகக் குறுகிய வட்டத்தில் மட்டுமே கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தது. அவர்களின் கருத்துகளே சிந்தனையைப் பாதித்தது. ஆனால், இப்போது அப்படி இல்லை. ஏராளமான அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வாயிலாக சிந்தையை விரிவு செய்யும் வாய்ப்பு உள்ளது. சமூக வலை தளங்களில், உலகளாவிய கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன.
வளர்ச்சி சரியாக உள்ளதா..? விவாதங்கள் சரியான பாதையில்தான் செல்கிறதா..? யாரையாவது கிண்டல் செய்யவும், குற்றம் சுமத்தவும், தற்பெருமை பேசவும் மட்டுமே இவை அதிகம் பயன்படுத்தப் படுகின்றன. அதிகம் பேர் பகிர்வதனாலேயே அது உண்மை ஆகிவிடாது. ஒன்றின், விரிவு மட்டுமே நன்மை ஆகிவிடாது. அதன் செறிவு முக்கியம். மக்களின் மீதான பரிவு முக்கியம். நல்லவை, தீர்வுகள் குறித்த அறிவு முக்கியம்.
பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்று சொல்லிக் கொண்டு, பயனற்ற விவாதங்கள் நடைபெறுகின்றன. எல்லா செய்திகளிலும் பரபரப்பும், கிளுகிளுப்பும் சேர்க்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மாட்டிறைச்சி விவகாரம். என்னைப் பொறுத்தவரை, மாட்டிறைச்சி குறித்த ஆர்எஸ்எஸ் அரசியலும், அவர்களை எதிர்ப்பவர்களின் அரசியலும் – இரண்டுமே மோசமானது. அருவருப்பானது. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, உண்மையான பிரச்சினைகளைப் புறந்தள்ளுவதே ஆகும். இதைப் பற்றிய கருத்துகளை ஊடகங்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டால், வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்த கவனம் அதிகம் ஆகும்.

என்ன செய்ய வேண்டும்..?


     விருப்பு, வெறுப்பை விட, சமூகப் பொறுப்புதான் முக்கியம் என்று உணர்ந்து செயல் பட வேண்டும். முன்பு சொன்ன உதாரணத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன். ரஜினியைப் பிடிக்கும் என்றாலும், அவர் நடிப்பில் எவை சரியில்லை, எவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் துணிவு வேண்டும். சச்சினைப் பிடிக்காது என்றாலும், அவர் இந்திய அணிக்காகத்தான் விளையாடுகிறார், அவர் குவிக்கும் ரன்கள் அணியின் வெற்றிக்கும் பயன்படும் என்ற தெளிவு வேண்டும். பொறுப்பு, துணிவு மற்றும் தெளிவு ஆகிய மூன்றுமே, ஊடகங்கள் மற்றும் கருத்தாளர்களின் முக்கியமான பண்புகளாக இருக்க வேண்டும். இனிமேல் ஆவது, இலக்குகளில் தெளிவாக இருப்போம்..! இயக்குபவர்கள் குறித்து அல்ல..! நம் எண்ணங்களை மாற்றிக் கொள்வோம்..! எதிரிகளை அல்ல..!