செவ்வாய், 19 ஜூலை, 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை - 3


நூல்: நல்லவன் வெல்வது எப்படி..?
ஆசிரியர்: பவான் சவுத்ரி
வெளியீடு: Wisdom Village Publications Pvt. Ltd.
பக்கங்கள்: 208    விலை: ரூ. 150/-

சில புத்தகங்களின் தலைப்பே நம்மை வாங்கவும், வாசிக்கவும் தூண்டும். அப்படி ஒரு நூல்தான் இது.

நான் வெற்றியாளனா என்பதில் எனக்குள்ளும், என்னை அறிந்தவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் எப்போதும் நிலவுகின்றன. ஆனால், நான் நல்லவன் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். வெற்றி  என்றாலே தவறான வழிகளில் அடைவது என்று சமகாலம் நமக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. அப்படியானால், என் நல்ல தன்மைகள் மாறாமல், நான் எப்படி "பெருவெற்றி" பெறுவது என்று நீண்ட நாட்களாக சிந்தித்து இருக்கிறேன். என் சிந்தனைகள் வளம்பெற இந்த நூல் பேருதவி புரிந்துள்ளது.

சிறந்த சிந்தனையாளராக விளங்கும் பவான் சவுத்ரி, அவ்வப்போது நமக்குத் தோன்றும் சிந்தனைகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இவ்வளவு சிந்தனைகளைத் தொகுத்து வழங்குவது என்பது ஒரு இமாலயப் பணி. அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மூன்று பெரும்பகுதிகளை உள்ளடக்கிய இந்நூலில், முதல் பிரிவில் நேர்மையற்றவர்கள் செயல்படும் விதங்களை, 14 தலைப்புகளில் விளக்கியுள்ளார். எல்லா நேர்மையாளர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவற்றில் உள்ளன. ஏனென்றால், அப்போதுதான் விழிப்போடு இருந்து தன்னையும், பிறரையும் காக்க முடியும்.

இரண்டாவது பிரிவில், நேர்மையற்றவர்களை சமாளித்து எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான தந்திரங்கள், வல்லமைகள், வழிமுறைகளை மிகச் சிறப்பாக 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார். வெறும் நம்பிக்கையை மட்டுமல்லாது, நடைமுறையில் நல்லவர்கள் வெல்வதற்கான வழிகளையும் அருமையான உதாரணங்களோடு தந்திருக்கிறார்.

மூன்றாவது பிரிவில், ஆளுமையின் அடித்தளங்கள் என்று பல தலைப்புகளைத் தந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரை, மிகவும் சுமாரான பகுதி இது. தத்துவங்களும், பொன்மொழிகளுமே நிறைந்துள்ளன.

வழக்கம்போல், கடினமான மொழிபெயர்ப்புதான் என்றாலும், நிறைவாகவே செய்துள்ளார் சின்னத்தம்பி முருகேசன். சிற்சில குறைகள் இருக்கின்றன... வார்த்தைகளின் தேர்விலும்  வாக்கிய அமைப்பிலும். பரவாயில்லை.

மொத்தத்தில், இது ஒரு முறை படித்து, விட்டு விடும் நூல் அல்ல. பல முறை படிக்க வேண்டியது. அடிக்கடி சிந்திக்க வேண்டியது. பாதுகாத்து அவ்வப்போது சரிபார்க்க வேண்டியது. இது வரை நான் படித்துள்ள ஆயிரக்கணக்கான நூல்களில், ஆகச்சிறந்த 50 நூல்களில், நிச்சயம் இந்த நூலுக்கு இடம் உண்டு.

வெள்ளி, 15 ஜூலை, 2016

Mr.K.Murugabharathi Speech at YADHAVA COLLEGE

மதுரை EMG யாதவா மகளிர் கல்லூரியின், Fresher's Day விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, நான் ஆற்றிய உரையை, விருட்சம் டிவி, YouTube-ல் Upload செய்துள்ளனர். முழு உரையின் ஒலிப்பதிவை, இந்த link-ல் கேட்டு, தங்கள் மேன்மைமிகு கருத்துகளைப் பதிவிடுங்கள்.



வியாழன், 30 ஜூன், 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை: - 2





நூல்: வாங்க அறிவியல் பேசலாம்
ஆசிரியர்: இரா. நடராசன்
வெளியீடு: Books for Children
பக்கங்கள்: 112        விலை: ரூ. 80/-

பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்கள் எடுத்தும், (1996-ல் அது உசத்தி) +1-ல் Commerce Group-ல் நான் சேர்ந்ததற்குக் காரணமே, எனக்கு அறிவியல் பாடம் பிடிக்காது என்பதால்தான். அப்படிப் பிடிக்காமல் போனதற்கு ஒரு ஆசிரியர்தான் காரணம் என்றாலும், அதற்குப் பின்னும் சுமார் 15 ஆண்டுகளுக்கு, (சுஜாதாவின் நூல்கள் தவிர) எனக்கும் அறிவியல் குறித்த புத்தகங்களுக்கும் தொடர்பே இல்லாமல் போனது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான், ஸ்டீபன் ஹாகிங்ஸ், பில் பிரைசன் போன்றோரின் சில நூல்களைப் படித்து வருகிறேன்.

     அறிவியல் உட்பட, கல்வி குறித்து எழுதுபவர்களில் நான் மதிக்கும் சிலரில் முக்கியமானவர் ‘ஆயிஷா’ இரா. நடராசன். அவர் மொழியாக்கம் செய்து, தொகுத்திருக்கும் நூல்தான் ‘வாங்க அறிவியல் பேசலாம்’. உலகப் புகழ் பெற்ற 15 அறிவியலாளர்களின் நேர்காணல்கள் இதில் இடம்பெற்றுள்ளது. பல்வேறு காலங்களில், பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவர்களின் நேர்காணல்களைத் தேடித் தொகுத்திருப்பதற்காகவே நிச்சயம் பாராட்டலாம். சாமானியர்களும் அறிந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், சர்.சி.வி. ராமன் போன்றவர்கள் முதல், அறிவியலைக் கவனிப்போர் மட்டுமே அறிந்த கார்ல் சாகன், ரிச்சர்ட் டாக்கின்ஸ் வரை, சிறந்த அறிவியல் ஆளுமைகளின் சாதனைகள் மற்றும் கருத்துகளை அனைவரும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

        அறிவியல் மட்டுமல்லாது, சமகால அரசியல் மற்றும் சமூகவியலைப் புரிந்துகொள்ளவும் இப்புத்தகம் பயன்படும். அறிவியல் ஆள்பவர்களுக்கானது அல்ல; அது மக்களுக்கானது என்ற கருத்து, நூல் முழுவதும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட அறிவியலாளர்களின் பொதுநலனும், தியாகமும், விடாமுயற்சியும், தங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த அறிவியலாளர்கள் மீது கொண்டுள்ள மதிப்பும் அனைவரும் போற்றவும், பின்பற்றவும் வேண்டியவை.
     புத்தகத்தில், என்னைத் தாக்கிய, எண்ணங்களைத் தூக்கிய ஏராளமான வரிகளில், சிலவற்றை இங்கே தருகிறேன்.
-- “சந்தைத் தலையீடுகள், இன்று வெற்றி என்பதைக் கருத்தாக்கத்தின் புதிய சிந்தனைப் பதிவாகப் பார்க்காமல், அதிக விற்பனைத் தன்மையாகப் பார்க்கும் அவலம், அறிவியல் சிந்தனைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும்.” – ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்.
-- “நாங்கள் எங்கள் Web-க்கு (www) கட்டணம் வசூலிக்காதது மட்டுமல்ல, கண்டுபிடிப்பு உரிமமோ, உரிமை வசூலோ (Royalties) இன்று வரை ஒரு டாலர் கூட பெற்றது இல்லை. பொது சேவை – அதுவே எனது குறிக்கோள். ஆகஸ்ட் 6 என்பது ஹிரோஷிமாவை நினைவுபடுத்தும் பேரழிவு நாள். அதே நாளில் இணையத்தை, உலகை ஒன்றிணைக்கும் முயற்சியாக வெளிப்படுத்த நான் விரும்பினேன்.” – டிம் பெர்னர் லீ.
-- “ஒருவர் பெரிய ஆளாக வாழ்கிறாரா என்பதை விட, தன் சுய விருப்பப்படி பாசாங்கற்ற மனிதராக வாழும் உரிமை பெரியது.” – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
-- “என் ரத்த நாளங்களிலிருந்து அணுக்கதிர் வீச்சு முழுமையாக விலகவில்லை. என் குழந்தைகளுக்கும் அதே நிலை. ஆனால், உலகம் பாடம் கற்கவில்லை என்றே தோன்றுகிறது.” – ட்சுடோமு யாமகுச்சி (ஹிரோஷிமா, நாகசாகி இரண்டு அணுகுண்டுத் தாக்குதலிலும் உயிர் பிழைத்த ஒரே மனிதர் – 2009-ல் அளித்த பேட்டியில்)
-- “ஏனைய விலங்குகள் போலன்றி, மனிதன் தனக்குள் தானே எப்போதும் எதையோ பேசியபடியே இருப்பதை நிறுத்த முடிவதில்லை. உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதை நிறுத்த எவ்வளவு முயன்றாலும் முடிவதே கிடையாது.” – நோம் சாம்ஸ்கி.
-- “பழைய அரைத்த மாவையே அரைத்து, பி.எச்.டி. வாங்கி, அதிகாரக் குழுமத்தில் இடம் பிடித்து... வரும் சந்ததியையும் வீணடிக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் (IT sector) லட்சக்கணக்கான இளைஞர்களை இழுத்து வீணடித்து விட்டது. அங்கே ஒரே மாதிரி வேலையை, இரவும் பகலும் பார்த்து, தனது இளமையை முற்றிலும் பணமாக்குவது தவிர, அறிவியலுக்கு அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.” – சி.என்.ஆர். ராவ் (பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி)
     இப்படி ஏராளமான அரிய செய்திகளும், சிந்தனைகளும் புத்தகம் முழுதும் கொட்டிக் கிடக்கின்றன. குறைகளும் உண்டு. மிகச் சுமாரான மொழியாக்கமும், எழுத்துப் பிழைகளும் தடங்கல்களாக நிற்கின்றன. பொதுவான நூலாக இன்றி, நூலாசிரியர், தன் கருத்துகளுக்கு ஏற்ற அறிஞர்களின் கருத்துகளை மட்டும் தேர்வு செய்திருக்கிறாரோ என்ற ஐயமும் ஏற்படுகிறது. குறிப்பாக, நாத்திகவாதமும், இடதுசாரிப் பற்றும் கொஞ்சம் தூக்கலாக உள்ளது.

     மொத்தத்தில், அனைவரும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டிய அறிவுப் பெட்டகம். பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷம் இந்த நூல்.

செவ்வாய், 28 ஜூன், 2016

Rtr.K.Murugabharathi Effective Speech



திருச்சி ராக்போர்ட் ரோட்டரி சங்கத்தின் கூட்டத்தில், ஜூன் 9-ல்,  "வழியை மாற்றுங்கள் -
தொழிலை அல்ல..!" என்ற தலைப்பில், 30 நிமிடங்கள் நான் ஆற்றிய உரையின்
ஆடியோ, விருட்சம் டிவி மூலம் இணையத்தில் வெளியிடப் பெற்றுள்ளது. கேட்டுப்
பயன்பெறுமாறு வேண்டுகிறேன்.

(Rtr முடித்து, Rtn ஆகி, அதிலிருந்தும் விலகிய பின், பழைய நினைவில் தம்பி Muthu Palaniappan, 'Rtr' என்று போட்டு விட்டார்.)



ஞாயிறு, 19 ஜூன், 2016

வாங்கிய நூல்களில் உள்வாங்கியவை

சில நாட்களுக்கு முன், சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று, நிறைய நூல்கள் வாங்கினேன். நூல் பட்டியலை, முகநூலில் பதிவிட்டேன். பிறகு, ஒரு சிந்தனை.

புத்தகக் காட்சிக்குச் செல்வது, புத்தகங்களுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பது, வீடு / அலுவலகத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பது... இவை எல்லாமே மற்றவரிடம் பெருமை பேசவே உதவும்.

படித்தால்தான் கற்க முடியும். பகிர்ந்தால்தான் மற்றவர்களுக்கும் பயன்படும். எனவேதான், புத்தகக் காட்சியில் நான் வாங்கிய நூல்களில், வாசித்து உள்வாங்கி, என் கருத்துகளைத் தொடர்ந்து பதிவிட முடிவு செய்தேன். இது முதல் நூல் பற்றிய முதல் கட்டுரை.

நூல்: முதல் முகவரி
ஆசிரியர்: வெ. நீலகண்டன்
வெளியீடு: Blackhole Media
பக்கங்கள்: 164   விலை: ரூ.140/-

குங்குமம் வார இதழின் தலைமை நிருபரான திரு.வெ. நீலகண்டன் எழுதியுள்ள, வெற்றியாளர்களின் வாழ்க்கை குறித்த நூல் இது. முகநூலில் நண்பராக உள்ள அவரின் பதிவைப் பார்த்துவிட்டுத்தான், இந்நூலை வாங்கினேன்.

எனக்கு எப்போதும் வாழ்க்கை வரலாறுகள் பிடிக்கும். அதிலும் இந்நூல், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னைக்கு வந்து வென்ற 25 சமகாலப் பிரபலங்கள் பற்றியது. சொல்லவா வேண்டும். ஆர்வத்துடன் படித்தேன்.

முதல் பாராட்டு இட ஒதுக்கீட்டுக்கு..! பல ஊர்கள், சாதிகள், துறைகளைச் சார்ந்தவர்களின் கலவை சிறப்பாக உள்ளது. ஒரு திருநங்கையின் (நர்த்தகி நட்ராஜ்) வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்த பூங்கொத்து, எழுத்து மொழிக்கு. அவரவர்கள் பேசுவதாகவே வழங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது, வெறும் தகவல்களாக இல்லாமல் அனுபவப் பகிர்வாக இருப்பது. என்னைக் கவர்ந்த முக்கிய அம்சம் இது.

வடிவமைப்பும், அச்சும் நன்று. எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருந்தால், வாசிப்பு இன்னும் சுகமாக இருந்திருக்கும். 25 பேரில், ஒரு பெண் கூட இடம்பெறாதது, ஒரு வருத்தம்.

நூலில், எழுத்தாளர் அல்ல... பத்திரிக்கையாளரே வெளிப்படுகிறார். அதுவும், 25 பேரில் 13 பேர் திரைத்துறையைச் சார்ந்தவர்களாகவே இருப்பது, மக்களின் மனத்தையும், ஊடகங்களின் குணத்தையும் பிரதிபலிக்கிறது.

இரண்டு காரணங்களுக்காக, இந்நூலைப் பரிந்துரைக்கிறேன். ஒன்று... ஏதோ காரணங்களால் பூஜ்ஜியமான நிலையில் இருந்து, தளராமல் உழைத்து,  தங்களுக்கென தனி ராஜ்ஜியத்தைப் படைத்தவர்களின் அனுபவங்கள் தரும் உத்வேகம்.

இரண்டு... பெரும்பாலானோர், தங்களின் வெற்றிக்குக் காரணமாகத் தங்கள் பெற்றோரின் பண்புகளையும், உழைப்பையும் நினைவு கூர்ந்து சொல்லியுள்ளது. இன்றைய இளைஞர்கள் உணர வேண்டிய பாடம் இது.

மொத்தத்தில்... இவை 25 பிரபலங்களின் அனுபவக் கதைகள் மட்டுமல்ல. தன்னம்பிக்கை விதைகள்..!

திங்கள், 11 ஏப்ரல், 2016

கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு..?


     தேர்தல் நெருங்கி வருகிறது. எல்லா மனிதர்களும், எல்லா ஊடகங்களும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் இந்திய ஜனநாயகத்தில், கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யோசிப்போமா..!

     தமிழர்களின் ரத்தத்திலேயே கட்சி ஊறியுள்ளது என நினைக்கிறேன். எப்படி வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும், சாதி உள்ளுக்குள் கலந்தே இருக்கிறதோ அப்படி. குடும்பத்தில் குழந்தையிடம் கூட, ஏதேனும் விவாதம் வந்தால், “நீ எப்பவுமே அம்மா கட்சிதான்” என்கிறார் அப்பா. நண்பர்களிடையே, பொது இடங்களில், மேடைகளில், வலைத்தளங்களில், வணிகத்தில் என்று எல்லா இடங்களிலும், கட்சியின் காட்சி தெரிகிறது.

     இங்கே பெரும்பாலானோர் கட்சி அரசியலில் கலந்தே இருக்கின்றனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு ஆதரவோ, எதிர்ப்போ இருக்கிறது. எதிர் எதிர் அணியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் கூட, சிலரோடு மட்டும் நட்புப் பாராட்டுவதை, தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கிறோம். நேரடியாகக் கட்சியின் உறுப்பினராக இல்லாதவர்களும், ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான மன நிலையையே கொண்டுள்ளனர். சமீபமாக, எந்தக் கட்சியையும் ஆதரிக்காத சிலரிடம் கூட, ஒரு கட்சியைத் தீவிரமாக எதிர்க்கும் மனநிலையை, சமூக வலைத்தளங்களில் நான் காண்கிறேன். நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றி விமர்சிக்கும் போது, மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதை நான் கவனிக்கிறேன்.

     இதை எல்லாம் நான் அறிந்திருந்தாலும், ஆராய்ந்து ஓய்ந்திருந்தாலும், இன்னும் எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி... – தேர்தலில் ஒரு வாக்காளரைப் பொறுத்தவரை, கட்சிகளின் முக்கியத்துவம் என்ன..?

     உண்மையாகச் சொல்லப் போனால், ஒன்றுமே இல்லை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள, முதலில் நம் ஜனநாயக நடைமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

     மக்களாட்சி முறையில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று, அமெரிக்காவில் உள்ளது போன்ற நேரடி மக்களாட்சி. மற்றொன்று, நம் நாட்டில் உள்ளது போன்ற பிரதிநிதித்துவ மக்களாட்சி.

     நேரடி மக்களாட்சியில், மக்கள் எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று வாக்களிக்கின்றனர். அந்தக் கட்சி, மக்களின் பிரதிநிதிகளை முடிவு செய்யும். உதாரணமாக, அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. இதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதிக இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அந்தக் கட்சியின் சார்பில் யார் நிறுத்தப்படுகிராரோ, அவரே ஜனாதிபதி ஆவார்.

     ஆனால், இந்தியாவில் எந்த வாக்காளரும், எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியாது. இங்கே, அவரவர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கே வாக்களிக்கிறோம். கட்சிக்கு அல்ல. இந்த வேட்பாளர்களில், வெற்றி பெறுபவர்கள் இணைந்து, தங்களுக்குள் ஒருவரை முதல்வராகவோ, பிரதமராகவோ தேர்ந்து எடுப்பர். அதனால், முதல்வர் வேட்பாளர் என்பது சட்டப்படி எந்த முக்கியத்துவமும் இல்லாதது.

     வேட்பாளர்கள் சுயேச்சையாகவோ, கட்சி சார்ந்தோ போட்டியிடலாம். சின்னங்கள் கூட, வேட்பாளர்களை அடையாளப் படுத்தத்தானே தவிர, வேறெந்த முக்கியத்துவமும் இல்லை.

     பிறகு ஏன் கட்சி அரசியலைப் பற்றியே எப்போதும் பேசுகிறோம்..? ஆட்சி அமைக்க வசதியாக, கட்சி என்ற ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. கொள்கைகள்(?), கட்டுப்பாடு(?), நோக்கம்(?), ஒரு தலைமை(?) – இதெல்லாம் கட்சி என்ற அமைப்பில் இருக்க வேண்டும். அப்போது, எந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுகின்றார்களோ, அந்தக் கட்சியின் வெற்றியாளர்கள் மட்டும் கூடி ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். ஆளுநரும் அவரையே ஆட்சி அமைக்க அழைக்க வசதியாக இருக்கும். இதெல்லாம் கூட, சட்ட ரீதியான ஒரு ஏற்பாடுதான்.

     ஆனால், வாக்காளர் இது குறித்து எல்லாம் சிந்திக்கத் தேவையே இல்லை என்றே நான் நினைக்கிறேன். என் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர், சிறந்தவர், பொதுநலனுக்காக செயல்படுபவர் யார் என்று அறிந்து, ஆய்ந்து, தேர்ந்து ஓட்டுப் போடுவதுதான் வாக்களரின் வேலை. மாநில அளவில் எப்படி ஆட்சி அமைப்பது என்று சிந்திப்பது எல்லாம் அரசியல்வாதிகளின் வேலை. அவரவர் வேலையை அவரவர் பார்க்கலாமே..!

இன்று ஏற்பட்டுள்ள எல்லா சீரழிவுகளுக்கும், இந்தக் கட்சி சார்ந்த அரசியலே காரணம் என்று நான் எண்ணுகிறேன். எனக்குப் பிடித்த கட்சி, காரணமே தெரியாமல் கூட்டம் கூட்டமாகக், குடும்பத்தோடு ஆதரவளிக்கும் கட்சி என்றெல்லாம் பார்க்கிறோம். இதை விடக் கொடுமை, “ஜெயிக்கிற கட்சி”-க்கு ஓட்டளிப்பது. நான் ஓட்டுப் போடுபவர் ஜெயிக்க வேண்டுமா..? யார் ஜெயிப்பவர் என்ற ஆருடத்தின் அடிப்படையில் நான் ஓட்டுப் போடுவதா..? இது என்ன குதிரைப் பந்தயமா – ஜெயிக்கிற குதிரையின் மீது பணம் கட்ட..?

பல நேரங்களில், மனிதர்களின் கேடுகளுக்குக் காரணம், அவர்கள் அதீத அறிவாளிகள் ஆக முனைவதுதான். ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்சி, முதல்வர் வேட்பாளர் போன்ற மாயைகளை எல்லாம் உடைத்து எறிவோம். சாதாரண குடிமகனாக, சாமானிய வாக்களனாக, நம் கடமை, நம் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதே ஆகும். ஏனென்றால், மீண்டும் நினைவூட்டுகிறேன்... நம்மால், நம் தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவருக்கு மட்டுமே ஓட்டளிக்க முடியும். நம் தொகுதியின் பிரதிநிதியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

“நல்ல வேட்பாளருக்கே ஓட்டுப் போடுவோம்..!
யாருமே இல்லை என்றால்,

நோட்டா-விற்குப் போடுவோம்..!

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இளைஞர்கள் ஆட்சி

உலகின் இளமையான நாடு இந்தியா என்று போற்றிக் கொண்டே இருக்கிறோம். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது மட்டுமே பெருமை ஆகாது. அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், பெருமையா அல்லது பொறுப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
     இளைஞர்கள் பெரும்பாலும் சாதிக்கும் துறைகள் இரண்டுதான். ஒன்று விளையாட்டு. மற்றொன்று சினிமா. இந்தத் துறைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. என்றாலும், நம் நாட்டை முன்னேற்ற இந்தத் துறைகள் உதவாது. அதற்கு முக்கியமான துறை... அரசியல்..!

     அரசியலில் இளைஞர்களின் பங்கு என்ன..? இதுவரை இருந்த நம் நாட்டு நாடாளுமன்றங்களிலேயே, இப்போது இருக்கும் அவைதான் மிக வயதான அவை. ஆம்..! தற்போது இருக்கும் மக்களவை உறுப்பினர்களின் சராசரி வயது – 54.  இருக்கின்ற 543 மக்களவை உறுப்பினர்களில், 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை வெறும் 71 மட்டுமே.
     இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் நடந்த முதல் இரண்டு தேர்தல்களில்தான், இளைஞர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அது படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அதே நேரத்தில், 70 வயதுக்கும் அதிகமான ‘மூத்த குடிமக்களின்’ எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. என்ன செய்கிறோம் நாம்..?

     இந்திய நாடாளுமன்றத்தின் அதே நிலைதான், நம் தமிழகத்தின் சட்ட மன்றத்திலும். சில நாட்களில் ஆயுட்காலம் நிறைவுற இருக்கும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இளைஞர்கள். அதாவது, மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுள், 40 வயதிற்கும் குறைவானவர்கள், வெறும் 23 பேர் மட்டுமே. ஆனால், 60 வயதிற்கும் அதிகமானவர்களின் எண்ணிக்கையோ 31 ஆக உள்ளது.

     அரசியல் அனுபவம், பின்புலம், பணம் போன்ற காரணங்களைத் தயவு செய்து முன் வைக்காதீர்கள். ஏனென்றால், இவையெல்லாம் தேர்தலில் வெற்றி பெறுவதற்குக் காரணமாகச் சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், வாய்ப்பு அளித்தால்தானே வெற்றி பெறுவார்கள்..?
    2014 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டவர்களில் 14 சதவீதமும், பிஜேபி சார்பாகப் போட்டியிட்டவர்களில் 12 சதவீதமும் மட்டுமே 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.
     தமிழகத்தின் நிலை, இதை விடக் கொஞ்சம் பரவாயில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 738 வேட்பாளர்களில் 188 பேர் இளைஞர்கள். இதில், திமுக சார்பில் போட்டியிட்டவர்களில் சுமார் 30 சதவீதமும், அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களில் சுமார் 23 சதவீதமும் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

     

     ஆனால், மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் இளைஞர்கள் எனும்போது, வேட்பாளர்களிலும் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது இளைஞர்களாக இருக்க வேண்டாமா..? இது பற்றி நம் அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள் சிந்திப்பார்களா..?
     எல்லாக் கட்சிகளும், இளைஞர்களைக் குறிவைத்தே பிரச்சாரம் செய்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் வழியான சண்டை அதனால்தான் சூடு பிடித்திருக்கிறது. வாக்களிக்க மட்டும் எல்லாக் கட்சிகளுக்கும் இளைஞர்கள் வேண்டும். ஆனால் போட்டியிட வாய்ப்பு என்று வரும்போது இளைஞர்களுக்கு இல்லையா..? போஸ்டர் ஒட்டவும், போராடவும், கூட்டம் திரட்டவும் இளைஞர்கள் வேண்டும். பதவி கொடுக்கும்போது அவர்களைப் பின் தள்ளுவது நியாயமா..?
    

     இந்தியா முன்னேறுவதற்குக் கரை படியாத அரசியலும், முறையாகச் செயலாற்றும் அதிகாரமும் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அப்படி நடப்பதற்கு ஏதேனும் வாய்ப்பு மிச்சம் இருக்கிறது என்றால், அது இளைஞர்களால் மட்டுமே முடியும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.
     முதலில், அரசியல் கட்சிகள் மனம் வைக்க வேண்டும். அரசியல் சூழல் இளைஞர்கள் இணைவதற்கு உகந்ததாய் மாற வேண்டும். நல்ல அரசியல் குறித்து, இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
     மறியல்களும், வன்முறைகளும், சாதி வெறுப்புகளும், சகுனித்தனங்களும், பண பலங்களும், அணி சேர்ப்புகளுமே ‘அரசியல்’ என்ற எண்ணம் இளைஞர்களிடம் ஆழப் பதிந்துள்ளது. இதையே, என்டிடிவி-யின் ஆய்வும் எடுத்துக் காட்டுகிறது.




     இதை மாற்ற வேண்டும்..! நல்லெண்ணத்தை அவர்கள் மனதில் ஊற்ற வேண்டும்..! அதற்காக, நம் ஒவ்வொருவரும் கடமை ஆற்ற வேண்டும்..!


புதன், 9 மார்ச், 2016

தமிழனின் அரசியல்



செவிகள் சேர்த்ததை விட
செய்திகளில் பார்த்துத்தான்
தமிழரின் நிலை அறிந்தேன்..!
தரத்தினை உயர்த்திட
அரசியல் புகுவதென்று
என்னால் இயன்றவரை
எல்லாக் கட்சிகளும்
தன்னார்வத்துடன்
தேடித் திரிந்தேன்..!

அதிமுகவில் சேர முடியுமா..?
முதுகு வலி உள்ளதால்,
பிட்னெஸ் இல்லையாம்.
திமுகவில் தேற முடியுமா..?
தலைவர்களின் ரேஷன் கார்டில்
என் பெயர் இல்லாததால்
தகுதி இல்லையாம்.

மதிமுகவுக்கு மாற முடியுமா..?
அங்கே...
நடக்கத்தான் முடியும்.
அமர முடியாதாம்.
பாமகவுக்குள் பாய முடியுமா..?
அங்கே...
ஓடத்தான் முடியும்.
நிற்க முடியாதாம்.
தேமுதிகவுக்குத் தாவ முடியுமா..?
அங்கே...
வீசத்தான் முடியும்.
பேச முடியாதாம்.

சரி...
நானும் தமிழன் என்று
சீமானைப் படரலாமா..?
அங்கே...
இந்தியத் தமிழருக்கு
இடமே இல்லையாம்..!
காந்தியின் பேரன் என்று
மணியனைத் தொடரலாமா..?
இடப் பெயர்ச்சி எப்போதென்று
அவருக்கே தெரியாதாம்..!

கம்யூனிசத்தில் கலக்கலாமா..?
கரை சேர வழியில்லை.
காங்கிரசில் கரையலாமா..?
கறை சேர்க்க மனமில்லை.

பாஜக-வில் இணையலாமா..?
பெருக்குவதற்கு நான் தயார்.
வகுப்பதற்கு வர மாட்டேன்.
ஆம் ஆத்மி அதுவேனும்..?
கூட்டுவதில் குறையில்லை.
குழப்பத்திற்கும் குறைவில்லை.

சமக, நாமக, மூமுக, மமக
இஜக, கொமக, இன்னபிற ஏதேனும்..?
நான் யார் என்ற
அடையாளச் சிக்கலுக்குள்
அகப்படவே இயலாது.
தனிக்கட்சி... சுயேச்சை..?
“மணி”யும் இல்லை.
அணியும் இல்லை

இனி என்ன..?.
தேடிக் களைத்தபின்
வாடி இளைத்தபின்
கண்
மூடிக் கிடக்கையில்
ஞானம் பிறந்தது..!
அரசியலில்
எது என் இடம் என்ற
கலக்கம் தெளிந்தது..!

ஒழுங்காய்த் தேர்தலில்
ஓட்டுப் போடுவது..!
பிறகு..,
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவது..!


வியாழன், 28 ஜனவரி, 2016

ஒரு பக்கக் கதை - பாதுகாப்பு



நள்ளிரவு நேரம். ஒரு இளம்பெண் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் தனியே காத்திருந்தாள். ஒரு பேருந்து வந்ததும் ஏறினாள்.

பேருந்தின் உள்ளே மொத்தமே ஆறேழு பேர்தான். அங்கங்கே சிதறி  இருந்தனர். அத்தனை பேரும் ஆண்கள். டிக்கெட் கொடுக்க வந்த நடத்துநர், அவளை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுப் போனார்.

பேருந்து ஆள் அரவமற்ற, இருள் கவிந்த சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு பயணி அவளை நெருங்கினார். ஒரு சீட் இடைவெளி விட்டு அமர்ந்தார்.

அவள் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை. மனதிலும் இல்லை என்றுதான் தோன்றியது. ஏனெனில், அவள் செல்போனை நோண்டவில்லை. அவளிடம் செல்போன் இருந்ததாகவே தெரியவில்லை. 
ஒரு ஹேன்ட் பேக் மட்டுமே வைத்திருந்தாள்.

“ஏம்மா.., இந்த நேரத்துல தனியா வர்ற..? இந்தக் காலத்துல பெண்கள் பாதுகாப்பா இருக்க வேண்டாமா..?”

“ஏன்.., நான் இப்ப பாதுகாப்பாத்தானே இருக்கேன்..?” – நம்பிக்கையா, அலட்சியமா என்று புரியாத தொனியில் கேட்டாள்.

“பாதுகாப்பா..? பேக்-ல கத்தி, கித்தி வச்சிருக்கியா..?”

“எங்கிட்ட எந்த ஆயுதமும் இல்ல..!”

“பெப்பர் ஸ்ப்ரே, எமர்ஜென்சி டிவைஸ் ஏதும்..?”

“அதெல்லாம் எல்லா நேரத்துலயும் யூஸ் ஆகாது..!”

“அப்புறம் எப்...ப...டி............?”

“அதான் உங்களைப் போன்ற பல சகோதரர்கள் இருக்கிறார்களே..!” தீர்க்கமாகச் சொன்னாள்.

அவருக்குத் தலையிலும், மனசிலும் கணம் கூடியது போல இருந்தது.