திங்கள், 11 ஏப்ரல், 2016

கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு..?


     தேர்தல் நெருங்கி வருகிறது. எல்லா மனிதர்களும், எல்லா ஊடகங்களும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்றே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், நம் இந்திய ஜனநாயகத்தில், கட்சிக்கும், வாக்காளருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? யோசிப்போமா..!

     தமிழர்களின் ரத்தத்திலேயே கட்சி ஊறியுள்ளது என நினைக்கிறேன். எப்படி வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும், சாதி உள்ளுக்குள் கலந்தே இருக்கிறதோ அப்படி. குடும்பத்தில் குழந்தையிடம் கூட, ஏதேனும் விவாதம் வந்தால், “நீ எப்பவுமே அம்மா கட்சிதான்” என்கிறார் அப்பா. நண்பர்களிடையே, பொது இடங்களில், மேடைகளில், வலைத்தளங்களில், வணிகத்தில் என்று எல்லா இடங்களிலும், கட்சியின் காட்சி தெரிகிறது.

     இங்கே பெரும்பாலானோர் கட்சி அரசியலில் கலந்தே இருக்கின்றனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு ஆதரவோ, எதிர்ப்போ இருக்கிறது. எதிர் எதிர் அணியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் கூட, சிலரோடு மட்டும் நட்புப் பாராட்டுவதை, தொலைக்காட்சி விவாதங்களில் பார்க்கிறோம். நேரடியாகக் கட்சியின் உறுப்பினராக இல்லாதவர்களும், ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான மன நிலையையே கொண்டுள்ளனர். சமீபமாக, எந்தக் கட்சியையும் ஆதரிக்காத சிலரிடம் கூட, ஒரு கட்சியைத் தீவிரமாக எதிர்க்கும் மனநிலையை, சமூக வலைத்தளங்களில் நான் காண்கிறேன். நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட, ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பற்றி விமர்சிக்கும் போது, மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதை நான் கவனிக்கிறேன்.

     இதை எல்லாம் நான் அறிந்திருந்தாலும், ஆராய்ந்து ஓய்ந்திருந்தாலும், இன்னும் எனக்குள் இருக்கும் ஒரு கேள்வி... – தேர்தலில் ஒரு வாக்காளரைப் பொறுத்தவரை, கட்சிகளின் முக்கியத்துவம் என்ன..?

     உண்மையாகச் சொல்லப் போனால், ஒன்றுமே இல்லை. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள, முதலில் நம் ஜனநாயக நடைமுறையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

     மக்களாட்சி முறையில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று, அமெரிக்காவில் உள்ளது போன்ற நேரடி மக்களாட்சி. மற்றொன்று, நம் நாட்டில் உள்ளது போன்ற பிரதிநிதித்துவ மக்களாட்சி.

     நேரடி மக்களாட்சியில், மக்கள் எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று வாக்களிக்கின்றனர். அந்தக் கட்சி, மக்களின் பிரதிநிதிகளை முடிவு செய்யும். உதாரணமாக, அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு பெரிய கட்சிகள் உள்ளன. இதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்றே மக்கள் வாக்களிக்கிறார்கள். அதிக இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். அந்தக் கட்சியின் சார்பில் யார் நிறுத்தப்படுகிராரோ, அவரே ஜனாதிபதி ஆவார்.

     ஆனால், இந்தியாவில் எந்த வாக்காளரும், எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியாது. இங்கே, அவரவர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கே வாக்களிக்கிறோம். கட்சிக்கு அல்ல. இந்த வேட்பாளர்களில், வெற்றி பெறுபவர்கள் இணைந்து, தங்களுக்குள் ஒருவரை முதல்வராகவோ, பிரதமராகவோ தேர்ந்து எடுப்பர். அதனால், முதல்வர் வேட்பாளர் என்பது சட்டப்படி எந்த முக்கியத்துவமும் இல்லாதது.

     வேட்பாளர்கள் சுயேச்சையாகவோ, கட்சி சார்ந்தோ போட்டியிடலாம். சின்னங்கள் கூட, வேட்பாளர்களை அடையாளப் படுத்தத்தானே தவிர, வேறெந்த முக்கியத்துவமும் இல்லை.

     பிறகு ஏன் கட்சி அரசியலைப் பற்றியே எப்போதும் பேசுகிறோம்..? ஆட்சி அமைக்க வசதியாக, கட்சி என்ற ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. கொள்கைகள்(?), கட்டுப்பாடு(?), நோக்கம்(?), ஒரு தலைமை(?) – இதெல்லாம் கட்சி என்ற அமைப்பில் இருக்க வேண்டும். அப்போது, எந்தக் கட்சியின் உறுப்பினர்கள் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறுகின்றார்களோ, அந்தக் கட்சியின் வெற்றியாளர்கள் மட்டும் கூடி ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். ஆளுநரும் அவரையே ஆட்சி அமைக்க அழைக்க வசதியாக இருக்கும். இதெல்லாம் கூட, சட்ட ரீதியான ஒரு ஏற்பாடுதான்.

     ஆனால், வாக்காளர் இது குறித்து எல்லாம் சிந்திக்கத் தேவையே இல்லை என்றே நான் நினைக்கிறேன். என் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் நல்லவர், சிறந்தவர், பொதுநலனுக்காக செயல்படுபவர் யார் என்று அறிந்து, ஆய்ந்து, தேர்ந்து ஓட்டுப் போடுவதுதான் வாக்களரின் வேலை. மாநில அளவில் எப்படி ஆட்சி அமைப்பது என்று சிந்திப்பது எல்லாம் அரசியல்வாதிகளின் வேலை. அவரவர் வேலையை அவரவர் பார்க்கலாமே..!

இன்று ஏற்பட்டுள்ள எல்லா சீரழிவுகளுக்கும், இந்தக் கட்சி சார்ந்த அரசியலே காரணம் என்று நான் எண்ணுகிறேன். எனக்குப் பிடித்த கட்சி, காரணமே தெரியாமல் கூட்டம் கூட்டமாகக், குடும்பத்தோடு ஆதரவளிக்கும் கட்சி என்றெல்லாம் பார்க்கிறோம். இதை விடக் கொடுமை, “ஜெயிக்கிற கட்சி”-க்கு ஓட்டளிப்பது. நான் ஓட்டுப் போடுபவர் ஜெயிக்க வேண்டுமா..? யார் ஜெயிப்பவர் என்ற ஆருடத்தின் அடிப்படையில் நான் ஓட்டுப் போடுவதா..? இது என்ன குதிரைப் பந்தயமா – ஜெயிக்கிற குதிரையின் மீது பணம் கட்ட..?

பல நேரங்களில், மனிதர்களின் கேடுகளுக்குக் காரணம், அவர்கள் அதீத அறிவாளிகள் ஆக முனைவதுதான். ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்சி, முதல்வர் வேட்பாளர் போன்ற மாயைகளை எல்லாம் உடைத்து எறிவோம். சாதாரண குடிமகனாக, சாமானிய வாக்களனாக, நம் கடமை, நம் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதே ஆகும். ஏனென்றால், மீண்டும் நினைவூட்டுகிறேன்... நம்மால், நம் தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவருக்கு மட்டுமே ஓட்டளிக்க முடியும். நம் தொகுதியின் பிரதிநிதியை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும்.

“நல்ல வேட்பாளருக்கே ஓட்டுப் போடுவோம்..!
யாருமே இல்லை என்றால்,

நோட்டா-விற்குப் போடுவோம்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக