“என்னைக் கூட்டிக்கிட்டு போடான்னு தினம்தான் வேண்டிக்கிறேன். அந்தக் கடவுளுக்கு காது கேட்கவே மாட்டேங்குது” என்று அன்றாடம் புலம்பும் முதியவர்கள்... “இந்தக் குடும்பத்துல வாழறது என் தலையெழுத்து. சாக ஒரு வழி கிடைக்கலையே” என்று அரற்றும் கணவன், மனைவிமார்கள்... கோடிக்கணக்கான பெண்களில் யாரோ ஒருத்தி, தன் காதலை ஏற்கவில்லை என்பதற்காக வி~ம் குடிக்கும் இளைஞர்கள்... வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கணக்கான தேர்வுகளில் வெல்ல வேண்டியிருப்பது தெரியாமல், ஒரே ஒரு வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காகத் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள்... தான் இறந்துவிடுவோமா என்ற அச்சத்திலேயே தினம் தினம் இறந்துபோகும் நோயாளிகள்... இறந்துவிடக் கூடாது என்று, உயிர் மீது அதீத ஆசை கொண்டு, எச்சரிக்கை என்ற பெயரில் எல்லாரையும் கலங்கடிக்கும் முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்... அப்பப்பா..! இந்த உலகில் எல்லா மனிதர்களும், வாழ்வதை விட சாவதைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறார்களோ..? நானும் சிந்திக்கிறேன்...
பொதுவாக நாம் எல்லாரும் சொல்வோம் - நமக்கெல்லாம் பிறந்த தேதி தெரியும், இறக்கும் தேதி தெரியாது என்று. ஆனால் உண்மையில் யோசித்துப் பார்த்தால், நாம் பிறந்த பின்னர்தான், நமக்குப் பிறந்த தேதி தெரியும். அதற்கு முன் தெரியாது. அதே போல் தான், இறக்கும் வரையில், நம் இறந்த தேதியும் தெரியாது. வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக்கும் இரகசியமே அதுதானே! கண்ணதாசன் கூட சொல்வாராம் - “எனக்கு சாவைக் கண்டு பயமில்லை. ஏனென்றால் நான் இருக்கும் வரை அது என்னிடம் வரப்போவதில்லை. சாவு வரும்போது, நான் இருக்கப் போவதில்லை” என்று.
நாம் அனைவருமே, சாவைப் பற்றிப் பயப்படுகிறோம். கவலைப்படுகிறோம் அல்லது குறைந்தபட்சம் சிந்திக்கிறோம். யோசித்துப் பார்த்தால், நம்மை, நம் மரணத்தைத் தவிர, மற்ற எல்லா மரணங்களும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கிறது. சுனாமி, நிலநடுக்கம், வெள்ளம் என இயற்கைச் சீற்றங்களால் உயிரிழப்போர், போர்கள், குண்டுவெடிப்புகள், வன்முறைகள், கொலைகள், விபத்துகள் மற்றும் நோய்களினால் மாண்டு போவோர் என்று நித்தம் நித்தம், ஊடகங்களின் வழியே நாம் அறியும், நமக்கு நேரடியான உறவோ, தொடர்போ இல்லாத எல்லா மனிதர்களின் மரணங்களும், நம்மைக் கலங்க வைக்கிறது. வைக்க வேண்டும். அப்போதுதான், நம்மிடம் மனித நேயம் மிச்சம் இருக்கிறது என்று பொருள்.
மேற்சொன்ன மரணங்கள் ஒரு சில நிமிடங்களில், நம் எண்ணங்களை விட்டு அகன்று விடுகின்றன. ஆனால், நம் நெருங்கிய உறவினர் அல்லது நண்பரின் மரணம், சில நேரங்களில் நம் வாழ்க்கையையே பாதிக்கிறது. மரணம் என்பது இயற்கையானது, தவிர்க்க முடியாதது, வள்ளுவர் சொல்வது போல், இந்த உலகமே “நெடுநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை படைத்தது” என்பன போன்ற உண்மைகளை நாம் அனைவரும் அறிவோம். இருந்தாலும், நாம் ஏன் இந்த மரணங்களால் பாதிக்கப்படுகிறோம்? – யோசி!
ஒரு பக்கம் பார்த்தால், மரணம் அடைந்தவரின் சடலத்தருகே இருந்து கொண்டு, இரவு பகலாக ஒப்பாரி வைக்கிறோம். இன்னொரு பக்கம் பார்த்தால், பிணத்தின் முன் ஆடுகிறோம், வெடி வெடிக்கிறோம், படையல் என்று விருந்து உண்கிறோம். சற்றே குழப்பமாகத்தான் உள்ளது. நாம் மரணத்தை வெறுக்கிறோமா அல்லது கொண்டாடுகிறோமா..?
என்னைப் பொறுத்தவரை, மரணம் என்பது கூட, பல் துலக்குவது, குளிப்பது போன்ற ஒரு சராசரி நிகழ்வே ஆகும். அதைக் கண்டு நாம் பயப்படுவதோ, கவலைப்படுவதோ, கொண்டாடுவதோ, வெறுப்பதோ பயனில்லாதது. நான், இந்த சமூகத்தில் காணப்படும் பல அவலங்களை எண்ணிப் பலவாறும் கவலைப்பட்டிருக்கிறேன். எனது பலநாள் உறக்கங்களைத் தொலைத்திருக்கிறேன். ஆனால், மரணங்கள் என்னை ஒருபோதும் பாதித்தது இல்லை. எந்த சாவு வீட்டிற்கும் சென்று நான் அழுததே இல்லை. அவ்வளவு ஏன்? இந்த உலகிலேயே, நான் மிகவும் நேசிக்கும் உயிரான என் அம்மாவிடமே, நான் சொல்வதுண்டு “நீ செத்தால், நான் அழ மாட்டேன்” என்று.
உடனே, என்னை இரக்கமே இல்லாத அரக்கன், அன்பே இல்லாத ஜடம் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். நான் கொஞ்சம் பிராக்டிக்கலாக எதையும் அணுகுபவன். அவ்வளவுதான். மரணமடைந்தவர்களுக்காக அழுவதை விட, அந்த மரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதையும், உதவி செய்வதையுமே முக்கியமாக எண்ணுபவன் நான். மரணத்தைக் கண்டு பயப்படுவர்களாலும், கவலைப்படுபவர்களாலும் எந்த உதவியையும் செய்ய முடியாது. விவேக் ஒரு படத்தில் இதையே கிண்டலாகச் சொல்வார் “நம்மாளுங்க, இருக்கும் போது தண்ணி கூட தரமாட்டார்கள். ஆனால், செத்தபிறகு பால் ஊற்றுவார்கள்” என்று. இறந்து போன என் சித்தப்பா மீது எனக்குப் பாசம் இருந்தாலும், அவரை விட, சோகத்தில் தவிக்கும் என் தம்பியின் நலனே முக்கியம் எனக் கருதுபவன் நான்.
பல நேரங்களில், உணர்ச்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் அறிவுக்கு வழங்குவதில்லை என்னும் கருத்துடையவன் நான். சற்றே சிந்தியுங்கள். நம் வீட்டில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்றால் என்ன செய்வோம்..? அழுவதாலோ, புலம்புவதாலோ, ஊரைக் கூட்டுவதாலோ ஏதாவது பயன் கிடைக்குமா? அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை அளிப்போம். (சிலர், நோயாளிகளிடமும், அந்த நோயைப் பற்றியே பேசி, அவரின் நம்பிக்கையைக் குலைக்கின்றனர். கேட்டால், பாசமாம்... அக்கறையாம்... என்ன கொடுமை சார், இது..?) நோயாளி உடல் நலம் பெறும் வரை, நம்பிக்கையை மட்டுமே அளிப்போம். அளிக்க வேண்டும். அப்படியிருக்க, நாம் ஒன்றும் செய்ய முடியாத, தவிர்க்க முடியாத, மரணத்தின் போது மட்டும், ஏன் இந்தச் சிக்கல்கள்...? – யோசி!
என்னைப் பொறுத்தவரை, மரணத்தின் மீது நாம் செலுத்தும் கவனத்தை விட, அதிகமாக, வாழ்வதில்தான் செலுத்த வேண்டும். மரணம் என்பதே, நாம் வாழும் நாட்களைப் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் செலவழிக்க வேண்டும் என்று நமக்கு நினைவூட்;டுவதற்கான ஒரு அடையாளம்தான். அதனால்தான், குறித்த காலத்திற்குள் செய்ய வேண்டியவற்றை, “டெட் லைன்” என்கிறோம். நான் செய்ய நினைத்த பலவற்றை, உடனே செய்து விடுவேன். என்றாவது ஒருநாள், எதிர்காலத்தில் என்றெல்லாம் நான் எதையும் வைத்துக்கொள்ளவில்லை. குறிக்கோள் இல்லாத வாழ்க்கையைப் பற்றி நான் சொல்லவில்லை. ஆனால், மிகவும் நீண்ட காலத்திற்கு நான் திட்டமிடுவது இல்லை என்றே சொல்கிறேன்.
அதனால்தான், நிறைய பணம் சேர்ப்பதற்கு முன்னதாகவே, ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, யாரிடமும் நன்கொடை பெறாமல், கடந்த 7 ஆண்டுகளாக பல உதவிகளைச் செய்து வருகிறேன். விருது வாங்க வேண்டிய வயதில், ஆண்டுதோறும், சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து, விருது வழங்கிக் கொண்டிருக்கிறேன். நான் பெரிய அளவில் ஒன்றும் சாதிக்கவில்லை. ஆனால், ஏராளமானோருக்கு, அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவிக் கொண்டு இருக்கிறேன். காரணம் ஒன்றுதான். நாளையே நான் இறக்க நேர்ந்தாலும், நான் வருத்தத்தோடு, ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முடியாத ஏக்கத்தோடு இறக்கக் கூடாது என்று நினைக்கிறேன். என்னால் என்ன முடியுமோ, அதைக் காலந்தாழ்த்தாமல் இப்போதே செய்கிறேன். அதனால்தான் வாழ்க்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது.
நீங்களும், காலம் கடத்தாமல், நல்ல செயல்களை, உங்களால் முடிந்த சமூகப் பணிகளை உடனே செய்யுங்கள். யாருக்கும் பயனில்லாத வாழ்க்கை என்பது மரணத்தை விட மோசமானது. அப்படிப் பல காலம் வாழ்ந்த ஒருவர், தன் கல்லறையில் எழுதச் சொன்னாராம், “இவர் 40 வயதில் இறந்தார். ஆனால் 70-ஆவது வயதில்தான் புதைக்கப்பட்டார்” என்று. அதாவது, 40 முதல் 70 வயது வரை, அவர் எதையும் சாதிக்கவில்லை என்று பொருள். அதனால்தான், பொருட்கள் இருக்கின்றன. மனிதர்கள் வாழ்கின்றனர். எத்தனை நாள் உயிருடன் இருந்தோம் என்பதல்ல, எத்தனை நாள் பயன்தர வாழ்ந்தோம் என்பதே முக்கியம். “மண்ணில் எட்டு நாள் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது. வாழும் நாளைச் சார்ந்தது, வாழ்க்கை என்பது” என்னும் திரைப்பாடலும் இதையேதான் நினைவூட்டுகிறது.
என் சிந்தனை இன்னும் நீள்கிறது. மரணங்கள், இறந்து போன மனிதர்களை விட, அவர்களை நம்பி இருந்தவர்களுக்குத்தான் அதிக பாதிப்புகளைத் தருகிறது. இந்த ஒரு உண்மையிலேயே நாம் தெரிந்து கொண்டுவிடலாம். மரணம் என்பது வேறொன்றுமில்லை, நண்பர்களே..! நாம் நம்பியவர்களின் இழப்பு, நம்மை நம்பியவர்களின் இழப்பு... சரியாகச் சொன்னால் நம்பிக்கையின் இழப்பு. இதைத்தான் விவேகானந்தர் சொன்னார் “நம்பிக்கையே வாழ்க்கை. நம்பிக்கை இன்மையே மரணம்” என்று.
ஆம்..! இந்த உலகில் எத்தனை எத்தனை பேர், தங்கள் நம்பிக்கையினால் மரணத்தை வென்ற பெருவாழ்வு வாழ்ந்துள்ளனர்... வாழ்கின்றனர். எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், தங்கள் நம்பிக்கையால், மீண்டு வந்து, மாபெரும் சாதனைகள் படைக்கின்றனர். சரித்திரங்களில் மட்டுமல்ல. சமீபத்திய நிகழ்வுகளும் கூட இதைத்தான் நமக்கு நினைவூட்டுகின்றன.
இந்தியாவின் தேசிய வாலிபால் வீராங்கனை ஆருணிமா. 2011, ஏப்ரல் 12-ஆம் நாள், ஒரு ரயில் பயணத்தின் போது, கொள்ளையர்களுடன் நடந்த போராட்டத்தில், அவரை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறிந்து விட்டனர். அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவரது ஒரு காலில் முழங்காலுக்குக் கீழ் முழுவதுமாக அறுவை சிகிச்சை மூலமாக நீக்கிவிட்டனர். எல்லாரும் அந்தப் பெண்ணின் மீது இரக்கப்பட்டனர். பரிதாபப்பட்டனர். ஆனால், அந்தப் பெண் தன் நம்பிக்கையை மட்டும் விடவில்லை. தான் வாழ்வது மட்டும் முக்கியமல்ல. இந்த உலகிற்கே தான் ஒரு நம்பிக்கைச் செய்தியாக இருக்க வேண்டுமென முடிவெடுத்தாள். நடக்கக் கூட முடியாது என்ற நிலையில் இருந்த அந்தப் பெண், சில நாட்களுக்கு முன், 2013, மே 21-ஆம் நாள், யாரும் எளிதில் சாதித்து விட முடியாத சாதனையாக, உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தாள்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றிய சிறுமிதான், பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய். இவரின் பணிகளைப் பொறுக்காத தாலிபான் படை, 2012 அக்டோபர் 9-ஆம் நாள் இவரைத் துப்பாக்கியால் துளைத்தது. குண்டடி பெற்று, பல நாட்கள் நினைவின்றிக் கிடந்த அச்சிறுமி, தீவிர சிகிச்சையின் பலனாக மீண்டும் எழுந்தாள். உடல் தேறியதும் அளித்த முதல் பேட்டியிலேயே, எந்தவிதமான மரண பயமும் இன்றித், தான் பெண் குழந்தைகளின் கல்விக்காகத் தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்தாள். தற்போது 15 வயதாகும் அப்பெண், “டைம்” பத்திரிக்கையின் நூறு சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளாள்.
ஆருணிமாவும், மலாலாவும், இன்னும் இந்த உலகில் நாம் பார்க்கும் ஏராளமான எளிய மனிதர்களும், ஒன்றைத்தான் நினைவூட்டுகின்றனர். “நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல, உங்களிடம் என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்” என்ற மந்திரச் சொற்கள்தான் அவை. வாழ்வும், சாவும் நம் கையில்தான் உள்ளது. நம் நம்பிக்கையில்தான் உள்ளது.
ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் சொல்வார், “சாகற நாள் தெரிஞ்சிட்டா, வாழற நாள் நரகமாயிடும்” என்று. ஆனால், உண்மை என்னவென்றால், வாழ்வைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர்களுக்கு, வாழ்க்கை எந்நாளும் சொர்க்கம்தான். சாவு என்பது எளிமையானது. அது தானாகவே ஒரு நாள் நம்மிடம் வந்தே தீரும். ஆனால் வாழ்க்கை அப்படி அல்ல. நாம்தான் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதுதான் சாதனை. அதுதான் வாழ்க்கை. அதுதான் நாம் பிறந்ததன் நோக்கம். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் அனுபவித்து, உற்சாகமாக வாழ்பவர்களுக்கு, வாழ்க்கை ஒரு வசந்தம். அவ்வாறே நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன். பாடல் வழியில் சொல்வதானால்,
“வாழ்க்கையை நேசி... வளம்பெற யோசி..!
ஒவ்வொரு கணமும் நேசி..! இன்னும் உயர வழி என்ன யோசி..!
எது நடந்தாலும் நேசி... அடுத்து என்ன செய்யலாம் யோசி..!”
ஒவ்வொரு கணமும் நேசி..! இன்னும் உயர வழி என்ன யோசி..!
எது நடந்தாலும் நேசி... அடுத்து என்ன செய்யலாம் யோசி..!”
(இந்தக் கட்டுரை, கோவையிலிருந்து வரும் “வெற்றிப் பாதை” இதழிலும் வெளியாகியுள்ளது.)
A good article to read and realise.
பதிலளிநீக்கு